March 1986..
மீனா அப்போதுதான் அலுவலகத்தில் நுழைந்து கையொப்பமிட்டாள்.
முதன்மை அலுவலர் தனது அறையிலிருந்து கையை ஆட்டி அவசரமாக அழைப்பதைக் கண்ணாடி வழியாகப் பார்த்த மீனா, உள்ளே விரைந்தாள்.
“ஊரிலேந்து உன்னோட அப்பா”
“அப்பா, என்ன, எதுக்கு ஆபீஸுக்கு phone பண்ணே?”
“அழாதே…தாத்தா… காலம்பற ரெண்டு மணிக்கு……”
“தாத்தாவா! என்னப்பா, கொஞ்சம் ஜாஸ்தியாரச்சயே எனக்கு
phone பண்ணியிருந்தா நா வந்திருப்பேனே… ஏம்பா இப்டிப் பண்ணே? நான் சாயந்திரத்துக்குள்ளே அங்க எப்டியும் வந்துடறேன் – பஸ் ஸ்டாண்டுக்கு வா”… இதற்குள் கண்களில் நீர் வர ஆரம்பித்து விட்டது.. குரல் உயர்ந்து அப்பாவிடம் கத்தியதில், முகம் சிவந்து, மூக்கு சிவந்து….
முதன்மை அலுவலர், ஒரு அர்த்தமுள்ள பார்வையுடன், “எத்தனை நாளைக்கு மட்டம்? என்ன, பொண்ணு பாக்கற படலமா? இல்லாத தாத்தாவை உண்டாக்கினயா?
இருக்கற தாத்தாவை இல்லன்னு சொல்றியா? என்ன மீனா…
CDITP வேலையில CL கூட நான் sanction பண்ண முடியாது”….. இதற்குள் மீனாவின் கண்ணீர் கட்டுப்பாட்டை உடைத்துக்கொண்டு
வெளியே வந்து விட்டது.
“Madam, வேலையிலருந்து நீங்க எடுத்தாலும் பரவால்ல – நான் ஒரு 3 நாளுக்காவது ஊருக்குப் போணும்” என்றவாறே ஒரு பேப்பரில் கீழே கையொப்பமிட்டு “மேல என்ன வேணா எழுதிக்குங்க” என்றவாறே இரண்டே அடியில் வாசற்படியை அடைந்தவள், மீண்டும் உள்ளே ஓடி வந்து, SB
counter இல் இருந்த சாந்தாவிடம்
“100 ரூவா கொடு – ஊருக்கு ஓடணும் – வந்து சொல்றேன்” – சாந்தாவின் கையிலிருந்து நோட்டைப் பிடுங்கியவாறே தாவி ஓடி
auto பிடித்து, கோவை பேருந்து நிலையம் அடைந்து, மதுரை செல்லும் பேருந்து கிளம்பிக் கொண்டிருப்பதைப்
பார்த்து, ஓடி, அதை நிறுத்தி, படியில் ஒரு காலும், கீழே ஒரு காலுமாக
auto காரனுக்குப் பணம் கொடுத்து, ஓட்டுநரை நன்றிப் பார்வை பார்த்தவாறே, பாதி காலியாக இருந்த வண்டியில், நல்ல இடமாகத் தேர்ந்து அமர்ந்து மூச்சுவிட்டாள்.
நடத்துனர் ஒரு நிமிடம் கழித்து அருகே வந்து, “என்னம்மா… எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்பிடி ஓடியாற…: என்றவாறே கையை நீட்ட, மீனாவின் கண்கள் அருவியாகப் பொழியத் தொடங்கின. இந்த மாதிரி கேள்விக்கு, சூடான அல்லது வம்பான பதிலைச் சொல்லியிருப்பாள்… இன்று, வெறும் சோகப் புன்னகையுடன் “மதுரை” என்று பணத்தை நீட்டிக் கையில் கிடைத்ததை எண்ணாமல் பார்க்காமல் பையில் போட்டு மூடியபின், சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடினாள்…………….
எப்போது மனித முகங்களை, குரல்களை அடையாளம் தெரிந்து கொள்ள அந்தக் குழந்தை அறிந்ததோ தெரியாது….. அந்த நாளிலிருந்து முதலில் தெரிந்து கொண்ட முகம் தாத்தாவுடையது… குரல் தாத்தாவுடையது….
கல்யாணமாகி ஐந்தே வருடங்களில் மூன்று குழந்தைகளுக்குத்
தாயானதால், முதல் இரண்டு குழந்தைகளையும் வாத்தியார் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற தன் தந்தையிடம், பழைய சோறு போட்டாலும், அத்துடன் நற்பண்புகளையும், நல்லறிவையும் சேர்த்து ஊட்டுவார் என்ற நம்பிக்கையில் விட்டிருந்தாள் செல்லம்மாள். அதனால், 4 வயது சரஸ்வதிக்கும், 2 வயது மீனாவிற்கும் அம்மா, அப்பா, எல்லாம் பாட்டி தாத்தா தான்.
பள்ளி செல்லத் தொடங்கி, அங்கு மற்ற குழந்தைகள் அம்மா, அப்பா சொல்வதைக் கேட்ட பின்னரே, அப்படி ஒரு உறவு இருப்பது பற்றி தெரிந்தது குழந்தை மீனாவுக்கு. பாட்டி தாத்தாவின் அன்பும், மாமாக்கள், அத்தைகள், சித்தியின் அரவணைப்பும், மாமாவின் 3 குழந்தைகளின் நட்புமே மீனாவின் குழந்தைப் பருவ நினைவுகளாயின.
“மீனா… சச்சு… பத்மா…” தாத்தாவின் குரல் காலை 5 மணிக்கு மீனாவின் பெயருடன் தான் துடங்கும். (ஒரு தடவ கூப்பிட்டதும் உடனே எழுந்துடுவா மீனா…. மத்ததெல்லாம் நாலு தடவ கூப்பிடணும் – தாத்தா)
தாத்தா ஒரு தடவை சொல்லும் ஸ்லோக வரியை இரண்டு தடவை திருப்பிச் சொல்ல வேண்டும். 5 குழந்தைகளும் சேர்ந்து சொல்லும் சத்தத்தில், பக்கத்து, எதிர்த்த வீட்டுக் குழந்தைகளும் வந்து சேர்ந்து கொள்வர். கொசு வலைக்குள் இருந்தவாறு, தொண்டையைக் கனைத்துக் கொண்டே, தாத்தா கிழமைக்கு ஒரு கடவுளின் மேல் ஸ்லோகங்கள், பாரதியார் பாடல்கள், பாசுரம், பகவத் கீதை என்று சொல்லித் தர, அடுத்த 5 வருடங்களில் கிட்டத்தட்ட 30 குழந்தைகள் 50க்கும் மேற்பட்ட நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டனர்.
6 மணிக்கு இந்த வகுப்பு முடியும். பள்ளி நாட்களில் 5 குழந்தைகளும் சேர்ந்து கிணற்றடிக் குளியல்; பாட்டி கையில் போடப் போட, சண்டை சச்சரவுகளுடன் (high protein – very good for growing children – எங்கோ படித்தது – பாட்டிக்குத் தெரியுமா?????) சாப்பிட்டு, கடைசி ஒரு வாய் சாதத்தை எல்லோரும் சேர்ந்து ஒதுக்கி, பாட்டி கத்தக் கத்த, எதையோ ஜெயித்த சந்தோஷத்துடன் ஓடி, புத்தகப் பையை தூக்கிக் கொண்டு, ஸ்லேட்டுக்கும் குச்சிக்கும் சண்டை, மத்யஸ்தங்களுடன்
பேசிக் கொண்டே தெருவோர சாக்கடையின் விளிம்பில் ஒருவர் பின் ஒருவராக 5 நிமிட தூரத்தை 20 நிமிடத்தில் நடந்து பள்ளி சேருவர்.
விடுமுறை நாட்களில் கிணற்றடிக் குளியல் ஆறு மணியிலிருந்து, எட்டு, பத்து என்று, கிணற்றின் நீர் அளவைப் பொறுத்து நீண்டு கொண்டே போகும். கடைசி தென்னைமரம் வரை வாய்க்காலில் குளியல் நீர் ஓட வேண்டும் என்பது குழந்தைகளின் திட்டம்… ராமநாதபுரம் (அப்போதைய) மாவட்டம் வரட்சிக்கு பேர் பெற்றது (போனது?)… ஒன்று திட்டம் நிறைவேறும்; அல்லது பாட்டி வந்து சத்தம் போட்டு எல்லோரையும் வீட்டுக்குள் விரட்டி விடுவார். தண்ணீர் விடு படலம், சில சமயம், அவரைக்காய் பறிக்கும் படலமாக, மல்லிச் செடிக்கு அணை கட்டி பேர் எழுதி தொங்கவிடும் படலமாக, களைச் செடி பிடுங்கும் படலம் என்று வித விதமான அவதாரங்கள் எடுக்கும். இதற்கெல்லாம் ஜன்னல் வழியாக தன் அறையில் அமர்ந்த வண்ணம் தன் வேலையுடன் வேலையாக தாத்தா தான்
direction தருவார்.
களைச் செடிகள் தோட்டத்தில் மண்டிவிட்டால், “வேருடன் 50”
என்ற ”ஒரு-அம்சத் திட்டம்” அமல் செய்யப்படும். வேருடன் 50 களைச் செடிகளைப் பிடுங்கிக் கூறு செய்து காட்ட, கூறுக்கு ஒன்று வீதமாக குண்டு மிட்டாய் கிடைக்கும். குழந்தைகள் ஐவரின் கண்களும் குண்டு மிட்டாய் மீதே இருக்கும் – மிட்டாயும், வேலைக்கேற்றபடி வேறு வேறு அவதாரம் எடுக்கும்.
மீண்டும் மாலை ஆறுமணிக்கு விளக்கேற்றி வைத்து பத்து நிமிஷம் கடவுள் வணக்கம். ஆறு மணிக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும், வீட்டு வாசலில் முட்டிக்கால் போட வேண்டும். ஒரு முழுநாளில் இந்த ஒரு விஷயம் தவறினால் மட்டும் தண்டனை நிச்சயம்.
(”counter ல
customer வரதுக்கு முன்னால வந்து ரெடியா இருக்குற ஒரே officer நீங்கதான் அம்மா” – எல்லாக் கிளைகளிலும் மீனாவுக்குக் கிடைக்கும் நிரந்தரப் பாராட்டு)..
குழந்தைகள் ஐவரில் சரஸ்வதி மட்டும் பிறந்ததிலிருந்தே
எல்லோரையும் தன்கீழ் பணிய வைக்கும் திறன் பெற்றிருந்தாள்.
மற்ற நால்வரும் அவள் பேச்சைக் கேட்பது என்பது மாறி, அவள் சொல்லாமல் ஒன்றும் செய்வதில்லை என்ற நிலைமை. இயற்கையாகவே எல்லோரைவிடவும் புத்திசாலித்தனமும், ஞாபக சக்தியும் அதிகம் இருந்ததால், குழந்தைகள் நால்வரும் தாத்தா பேச்சுக்கு அடுத்து சச்சு பேச்சிற்கு மறு பேச்சுப் பேச மாட்டனர்.
(அம்மோவ்…. சச்சு எப்படி டில்லியிலிருந்து சீக்கிரம் வர முடியும்? அவளுக்கு விஷயம் சரியான நேரத்தில் கிடைத்ததா? Flight இல் வருவாளோ? செலவாகுமே… மீனாவின் கண்கள் வற்றாமல் ஓடிக் கொண்டே இருந்தது)
ஒரு சிறு பையன் வந்து, “அக்கா… கண்டக்டர் குடுக்கச் சொன்னாரு” என்று ஒரு குவளை தேநீரும் ஒரு பொட்டலமும் கொடுத்து ஓடிவிட்டான்.
“இல்ல தங்கச்சி… நீ ஏதோ அழுதுகிட்டே இருக்கியா… மனசு கேக்கல்ல…. மொத்த பஸ்ஸும் கீழ எறங்கி டீ குடிக்குது பாத்தியா…. தப்பா நெனச்சுக்காத தங்கச்சி” ஒரு தடவைக்கு ரெண்டு தடவை “தங்கச்சி” போட்டுப் பேசியதில் கண்டக்டருக்குத் திருப்தி – மீனாவிற்கோ ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் ஒரு ஊற்றைத் தூண்டி விட்டது….
பஸ் பழநியிலிருந்து மதுரை நோக்கி ஓடியது.
குழந்தைகள் ஒவ்வொருவரின் ஒவ்வொரு நாளிலும் தாத்தாவின் தனி முத்திரை மேலும் மேலும் படிந்து கொண்டே போனது.
பக்கத்து வீட்டு அம்மாளுக்கு வருடத்திற்கு ஒரு குழந்தை தப்பாமல் பிறப்பதும், ஒவ்வொரு குழந்தை பிறந்ததும், தாத்தாவிடம் வந்து, “சாமி, பேரு வச்சுக் குடுங்க” என்று கேட்பதும் வழக்கமாகி விட்டது.
ஒருநாள் தாத்தா அந்த அம்மாளிடம் “இந்தக் குழந்தைக்கு அன்னபூரணின்னு பேரு வெச்சுடு. இதோட உன் குழந்தை பெத்துக்கற விஷயம் பூரணமாகணும்” என்று சொல்லியதும், அந்த அம்மாள் தாத்தா காலில் விழுந்து “என்னய்யா செய்ய….” என்று அழுததும் நேற்று போல் தோன்றுகிறது…. நிஜமாகவே அன்னபூரணி தான் அவர்களது கடைசிக் குழந்தையானாள்.
குழந்தைகள் ஐவரும் ஒன்றும் புரியாமல் (தாத்தா ஏதோ சாதிக்கிறார் என்ற புரிதல் மட்டுமே) பார்த்துக் கொண்டு நின்றனர்.
இன்னொரு நாள், மிகக் கவலையுடன் தாத்தாவிடம் போய், “தாத்தா, இந்த விசாலாட்சி என் class ல கணக்குல எப்பவும் 100க்கு 100 வாங்கறா தாத்தா (இதை சோகமாக) ஆனா, மத்த எல்லாத்துலயும் நான் தான் தாத்தா first mark (இதை குதித்துக் கொண்டு)” சொன்னதும், “ம்….very good very good….. அந்த விசாலாட்சியை வீட்டுக்குக் கூட்டிட்டு வா…. History, geography, science, English எல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து அவளையும் உன்ன மாதிரியே மார்க் வாங்க வெச்சுடு” என்றதும், முகம் தொய்ந்து போய் தாத்தா ஏன் விசாலாட்சிக்குப் பரிந்து வருகிறார்…. நான் இல்லையா அவர் பேத்தி… என்று புரிந்தும் புரியாமலும் மீனா போகிறாள்…. Best Team Leader Award மீனாவிற்கே 2 வருடமாகக் கிடைத்து வருவது அன்றைய அந்தப் பாடத்தினாலன்றோ? கண்கள் மீண்டும் பொங்குகின்றன……….
வீட்டில் வருடத்தில் 4 அல்லது 5 திவசங்கள் நடப்பதுண்டு. திவசம் முடிந்து, பிராமணர்கள் எல்லோரும் சாப்பிட்டுப் போகும் வரையில் எல்லோரும் கொலைப் பட்டினி. தாத்தா தான் திவசம் செய்கிறார். தோட்டத்திற்கு விரட்டப்பட்டிருக்கும் குழந்தைப் பட்டாளம் கஷ்டப்படுமேயென்று, யாருக்கும் (முக்கியமாக பாட்டிக்கு) தெரியாமல், ராயர் கடை இட்லி வாங்கி வரச் செய்து குழந்தைகளைச் சாப்பிடச் செய்வார். இதற்கென்றே குழந்தைகள் திவசம் என்று வருமென்று காத்திருப்பர்!
“பாட்டிகிட்ட மட்டும் சொல்லக்கூடாது பசங்களா…” என்ற ஆணைக்குப் பாட்டியிடம் மட்டும் சொல்ல வேண்டும் என்ற நினைப்பு வரும். பாட்டி, “பெண் குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு கற்றுத் தரும் அழகைப் பாரு” என்று தாத்தாவைக் கத்தக் கத்த, தாத்தா சிரிக்க, “என் பேத்திகள் உன் மாதிரி சமையலறை ஆள மாட்டார்கள்” என்று தாத்தா சிரிக்க…. குழந்தைகளுக்கெல்லாம் இனம் புரியா மகிழ்ச்சி. சின்ன விஷயங்களில் பெரிய சந்தோஷங்கள் கிடைத்த நாட்கள் அவை. அந்த நாடகங்களின் கர்த்தா இன்று ஏன் போக வேண்டும்? மீனா பஸ்ஸிலிருந்து வெளியே முதல் முறையாகப் பார்க்கிறாள்.
மாலை சூரியன் கொங்சம் மந்தமாக பஸ்ஸைத் தொடர்கிறான்.
“வா… வா… சூரியப் பழம் பார்க்கப் போகலாம்” தாத்தா பின்னால் ஐவரும் ஓடுவர். ஊரணிக்கரையில் சிகப்பாக, பெரிசாக, மறையும் சூரியனைப் பார்த்து, “சூரியப் பழம்” என்று கை தட்டி, சரியாக முழு சூரியன் மறைந்த அந்த மணித்துளியில் கைதட்டச் சொல்வார். ஏதோ முழு நாடக முடிவில் திரை போட்டதைப் பார்த்த மகிழ்வோடு, சூரியன் மறைந்த நாடகம் (கட்டணமில்லாமல்)
பார்த்து, மலர்ந்த கண்களுடன் முடியாத கேள்விகளுடன் திரும்புவர்.
Shakespeare, Brutus, Othello, Ceaser, போன்றவர்கள் இந்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு அறிமுகமாயினர்.
தாத்தா தான் பள்ளியின் தாளாளர்…….. குழந்தைகளுக்கோ பிடிபடாப் பெருமை…. கர்வம்……. ஆனால் தாத்தா ஏன் பள்ளியில் பார்த்தால் ஒன்றும் பேசமாட்டேனென்கிறார், சிரிப்பதுகூட இல்லை என்பது ரொம்ப நாட்கள் புரியாத புதிர். தாத்தா பள்ளிக்கு வந்து போனால், அடுத்த நாள் வயிறு சரியில்லை என்று படுத்துக் கொள்வார். “அந்த ஊசிப் போன தயிர் வடைய ஏன் திங்கணும்? ஏன் கஷ்டப்படணும்?”
என்று சொல்லிக் கொண்டே கருவேப்பிலைத் தொகையல் காரமில்லாமல் செய்து தாத்தாவிற்கு மட்டும் சுடுசாதத்துடன் பாட்டி தருவாள்.
இந்த மாதிரியான சிறப்பு கவனத்திற்காகவாவது தனக்கும் வயிறுவலி வராதா என்று மீனா நினைத்துக் கொள்வாள். இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது… ஆனால் ஆச்சரியம், ஒருமுறை கூட படுத்துக் கொண்டதாக நினைவில்லை – அவ்வளவு நல்ல ஆரோக்யம். - சித்தி தலைவலி என்றால் “தலையில் எங்கே, எப்படி வலிக்கும்? ஒரு புண்கூட இல்லையே” என்றும், வயிற்றுவலி என்றால் எப்படி வரும்? என்றும் ஏன் சித்தி மாதங்களில் சில நாட்கள் மட்டும் தோட்டத்திலேயே இருக்கிறாள் என்றும், பசி என்றால் என்ன? ஏழை என்பது யார், பணக்காரர் என்றால் யார், நாம் ஏழையா, பணக்காரரா? – இவையெல்லாம் ஐந்து குழந்தைகளும் தோட்டத் திண்ணையில் நட்சத்திர ஒளியில் அமர்ந்து அலசிய தலைப்புகள்.
அவரவர்க்குத் தோன்றிய கற்பனைகள் வெளிவரும். நடு நடுவே குழந்தைகளாக உருவாக்கிய சின்னச் சின்ன rhymes – புரிந்தும் புரியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சந்தித்த மனிதர்களின் மேல் – கேலியுடன், ஆச்சரியத்துடன்
–
“நல்லசாமி பிள்ளை – நாலு காலும் இல்லே” “கட்டம் கட்டமா போட்டு இருக்கு – முத்துலச்சுமி காலிலே” – எல்லாப் பாட்டிற்கும் அபிநயங்களும்,
நாட்டியமும், ராகங்களும் உண்டு.
பெரிய விடுமுறை நாட்களில் சச்சுவின் இயக்கத்தில் மற்ற நால்வரும் நாடகம், பாட்டு, நடனம் என அமர்க்களம்…. இவை எல்லாவற்றிற்கும் தாத்தா தான் Chief Guest – சித்தி, அத்தைகள், பாட்டியின் புடவைகள் படாத பாடுபடும்! ஆனால் தாத்தா தான் எல்லா மரியாதைக்கும் உரியவர்……
ஊரிலிருந்து சின்ன மாமாவோ, அம்மா அப்பாவோ வந்தால், உடனே தாத்தா சின்னதாக வரவேற்புப் பாட்டு எழுதி, ராகத்துடன் சொல்லிக் கொடுப்பார். ஆனால் தாத்தா சொல்லிக் கொடுத்த எல்லாப் பாட்டிற்கும் ராகம் ஒன்றே தான் – அடாணா – தாளம் போட்டுக் கொண்டு, அனுபவித்துப் பாடுவார் தாத்தா…
மார்கழி மாதமானால், சிவன் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவைப் போட்டி… பரிசுகள் அத்தனையும் இந்தக் குழந்தைகளுக்கே வருடா வருடம். மூன்று வருடங்கள் இவ்வாறு ஆனபின் நடத்துபவர்கள் தாத்தாவிடம் வந்து, “Sir, உங்க குழந்தைகளை போட்டிக்கு அனுப்ப வேண்டாம்… மத்த குழந்தைகளுக்கும்
chance கிடைக்கணுமில்லையா” என்று கெஞ்சிக் கேட்க தாத்தா அந்த வருடத்திலிருந்து ஆராவமுத ஐயங்காரின் திருப்பாவை சொற்பொழிவு கேட்கக் குழந்தைகளை அழைத்துச் செல்லத் தொடங்கினார்.
ஆண்டாளின் முப்பதாவது திருப்பாவையின்
“முப்பதும் தப்பாமே” இதன் நிஜ அர்த்தம் புரிய இரண்டு மூன்று வருடங்களானது மீனாவிற்கு.
பள்ளி ஆண்டுவிழா, நவராத்திரி வந்தால் குழந்தைகளுக்குக்
கொண்டாட்டம் தான் – சித்தி, வேறு வேறு வேடங்கள் போட்டு விடுவார் – குறவன் குறத்தி, கண்ணன் ராதா, முருகன் வள்ளி, ஆண் பெண், ராமன் சீதை – பெரிய நகைகள் ஒன்றும் கிடையாது – பாசி, பொறுக்கு மணிகள் – ஆனால் மனமெல்லாம் மகிழ்ச்சி, பெருமை….. சந்தோஷத்திற்கு அளவில்லாத நாட்கள் அவை.
பேருந்து ஒரு குலுக்கலுடன் நின்றது. மீனா கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
கோடை விடுமுறைகளில் போட்டி போட்டுக்கொண்டு, கீதையும், வடமொழியும் கற்றுக் கொண்டனர் தாத்தாவாகிய பீஷ்மாசார்யார், துரோனாச்சார்யர்,
வியாசரிடமிருந்து.
அடுத்த வருட வகுப்புப் பாடங்களை ஒருமுறை விடுமுறையிலேயே வாசித்து முடித்தனர் தாத்தாவின் காலடியில்.
மீனாவின் அழுகை நின்றது. அழுது ஒன்றும் ஆகப் போவதில்லை போன்ற philosophical எண்ணங்கள் தோன்றத் தொடங்கின.
பேருந்து பாத்திமாக் கல்லூரியைக் கடந்தது. கல்லூரியை ஏதோ ஏக்கத்துடன் பார்த்தாள். எந்தப் பாடம் படித்தாலும், தாத்தாவிற்கு அந்த
subject தெரிந்திருந்தது ஆச்சரியம். PUC யில்
French எடுத்துக் கொண்டதும், அந்தமொழி நாடகங்கள் பற்றியும், நாடகாசிரியர்கள்
பற்றியும் தாத்தா விளக்குவார். குடும்பமும் இப்போது மதுரைக்கு வந்திருந்தது… மாமாவின் வீட்டில் மாமா குழந்தைகளும், அம்மாவுடன் (அப்பா touring post) மீனாவும், அக்கா, தங்கை, தம்பிகளுடனும்….. தாத்தா தினமும் மாமா வீட்டிலிருந்து மீனாவின் வீட்டிற்கு மாலை நேரத்தில் வருவது வழக்கமாகிவிட்டது.
B.Com முடிந்ததும் வேலைகளுக்கு விண்ணப்பம் அனுப்பிக் காத்திருந்த வேளையில், பொழுது போக்குக்காகவும், வருமானத்திற்காகவும்
ஆரம்பித்த accountancy tuition முழுநேர வேலையானது – தாத்தாவின் கற்பிக்கும் முறை மீனாவில் ஊறியிருந்தது, அவளை மிக நல்ல ஆசிரியையாக்கியது. மீனாவிடம் கற்றுக் கொண்ட முதல் 5, +2 மாணவிகள் அத்தனை பேரும்
accountancy இல் 100க்கு 98 வாங்கியதும், அடுத்த வருடம், வீடே பள்ளியானது. 15
குழந்தைகள் வீதம் ஒரு batch (அவ்வளவு இடம் தான் இருந்தது வீட்டுக் கூடத்தில்) அவ்வாறு 4
batches. ராத்திரி 8 முதல் 9 வரை Bank பரிட்சையில் accountancy
எழுதும் இருவருக்கு
tuition.
ஒருநாள் மீனா “outstanding” “due” என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் விளக்கம் கொடுப்பதைத் திண்ணையிலிருந்து
கேட்டுக் கொண்டிருந்த தாத்தா, வகுப்பு முடிந்ததும் “பேஷ் பேஷ் – இப்படி எனக்குத் தோன்றியதே இல்லை – outstandingன்னா dueன்னு நான் நெனச்சேன்” என்று பாராட்டியதில் மீனாவிற்கு உற்சாகத்தில் தலை கால் புரியவில்லை – நோபல் பரிசு கிடைத்தால் கூட அந்த சந்தோஷம் கிடைத்திருக்குமா எனத் தெரியவில்லை.
இத்தனை வேலையிலும் மாலை 6லிருந்து 8 வரை தாத்தாவுடன் தான். தான் ஏற்கனவே பலமுறை படித்த புத்தகங்களை மீண்டும் மீண்டும் மீனாவைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். பின்னர் பிள்ளையார் கோவில் வரை ஒரு
walk – வீடு வர 8 மணியாகிவிடும்.
இப்போதெல்லாம் பாட்டி பாவம் கத்துவதில்லை – மிகவும் ஒடுங்கி விட்டாள் – இந்த 2 மணி நேரங்களில் நாட்டு நிலவரம், அரசியல், சினிமா, கல்லூரி, வேலை, பொருளாதாரம் என்று பேசாத விஷயமில்லை. தெலுகு பத்யத்திற்கு அர்த்தம் சொல்லி எப்படி அந்தக் காலக் கவிகள் இந்தக் கால நாட்டு நடப்பை அப்பொழுதே சொல்லிச் சென்றனர் என வியப்பார். இப்போதெல்லாம் தாத்தாவும் மீனாவும் தாத்தா பேத்தி என்றில்லாமல்,
நல்ல நண்பர்களாயிருந்தனர்.
Bank பரிட்சையில் தேறி State Bank of India வில் சேர்ந்ததும், வீட்டிற்கு வந்ததும் தன் வேலையைப் பற்றி, அலுவலக நண்பர்களைப் பற்றிப் பேச தாத்தா தான் நல்ல தோழியானார். எந்த விஷயத்தைப் பற்றியும் தாத்தாவுடன் அலசலாம்.
Officer பரிட்சை எழுதினால், வேற்று ஊரில் போய் தனியாகத் தங்க வேண்டும். அதற்கு வீட்டில் அனுமதி கிடைக்குமா என்று தாத்தாவிடம் தான் மீனா கேட்டாள்.
“உனக்கு எது சரியோ – அது செய் – எல்லாரும் என்ன சொல்லுவான்னு கவலைப்பட்டா அதுக்கு முடிவே இல்லை – ஆனா எந்தச் செயலும் யாரையும் கஷ்டப்படுத்தலைன்னா, அதைச் செய்யறதில தப்பே இல்ல” போன்ற உபதேசங்கள் தன் சொந்த வாழ்க்கை உதாரணங்களுடன் கிடைக்கும்.
பேருந்து மதுரையை அடைந்தது. சிவகங்கை செல்லும் பேருந்தைத் தேடி அமர்ந்தாள். இப்போது அழுகை முற்றிலும் நின்று, தெளிவடைந்திருந்தாள். சிவகங்கைப் பேருந்து 10 நிமிடங்களில் மதுரையிலிருந்து கிளம்பியது. காலையில், அலுவலகத்தில் சாப்பிடலாம் என்று வெறும் வயிற்றோடு
hostel லிலிருந்து கிளம்பி, இப்போது மாலை 6 மணிவரை நடத்துனர் தயவில் கிடைத்த ஒரு குவளைத் தேநீர் மட்டுமே கிடைத்த வயிறு கூச்சலிட ஆரம்பித்தது.
ஒரு சிறு பெண் பக்கத்தில் வந்து, “அக்கா, இஞ்சி மொரப்பா வாங்குக்கா – காலலேருந்து (வி)யாபாரமாகல்ல – வீட்டுக்குப் போனா அம்மா திட்டுங்கா” என்று அழும் தோரணையில் சொன்னாள்.
“உனக்கு தாத்தா இருக்காரா?”
“என்னக்கா – தாத்தாவா – ம்ம்ம்ம் – குடிச்சுட்டுக் கிடக்கும் வீட்ல – ஒரு காசுக்கு ப்ரோஜனமில்ல
“ - என்று அலட்சியமாகச் சொன்னவாறு இஞ்சி மொரப்பாவைத் தந்தாள்.
“நீயே வெச்சுக்கோ – உன் தாத்தாவுக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப் போ இந்த ரூவால” –
20 ரூபாய் கை மாறியது…
இதற்குள் பேருந்து சிவகங்கை நோக்கி ஓடத் துவங்கி விட்டது.
மீண்டும் தாத்தா பற்றின
flash-back!
அதுவரை நாத்திகம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், நாத்திகர்களை சந்தித்திராத மீனா, வங்கியில் விஜியின் நாத்திகம் கண்டு மிரண்டு போனாள். கடவுள் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் தனக்கு மிகவும் பிடித்த, தன்னுடன் எல்லாவற்றிலும் ஒத்து நினைக்கும் இந்த புத்திசாலி விஜி, கடவுளை எப்படி நம்ப மறுக்கிறாள் என்பது புரியாத மர்மமானது – அதற்கு பதில் கட்டாயம் தாத்தாவிடம் இருக்கும் – விஜி தாத்தாவுடன் பேசினால் கடவுள் இருப்பதை நம்புவாள் என்ற எண்ணத்துடன் தாத்தாவிடம், “தாத்தா – விஜி ரொம்ப நல்ல பொண்ணு தாத்தா (தாத்தா விஜியைத் தப்பாக நினைக்கக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன்) – ஆனா கடவுள்னு ஒண்ணு ஆரம்பிச்சது மனிஷங்கதான்னு முடிவாச் சொல்றா தாத்தா – உங்களப்பத்தி நான் சொன்னா, அவளுக்கு ஒரே ஆச்சர்யம் – அவள ஞாயித்துக்கிழம நம்ம வீட்டுக்குக் கூட்டி வரட்டா” மீனா வாயை மூடுமுன் தாத்தா நாத்திகரெல்லாம்
கெட்டவர்கள் இல்லை – அவர்கள் நம்புவதும் தப்பில்லை – என்று ஆரம்பித்து ஒருமணி நேரம் நாத்திகராகவே வாதாடியதில் மீனாவுக்கே சந்தேகமாயிற்று
– தாத்தா ஆத்திகரா, நாத்திகரா – தான் கடவுளை நம்புவதா, வேண்டாமா – தாத்தாவே பதிலும் தந்தார். “இத்தனை நாள் நான் சொன்னேன்னு ஸ்லோகம் சொன்ன – ஸ்வாமி நமஸ்காரம் பண்ணின – இனிமே நீயே யோசனை பண்ணி ஸ்வாமி இருக்காரா இல்லயான்னு தெரிஞ்சுக்கோ – நான் சொன்னேன்னு நம்பாத” – அயர்ந்து போனாள் மீனா.
அடுத்தநாள் தாத்தாவிடம் Ayn Randஇன் Atlas Shrugged பற்றிப் பேசினாள் – தாத்தா அயர்ந்து போனார் –
“wish you all success” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.
இப்போது பேருந்து மன்னர் கல்லூரியைத் தாண்டி மதுரை முக்கில் நின்றது. இயக்கிவிடப்பட்ட
இயந்திரம் போல் இறங்கி வீடு நோக்கி நடந்தாள். வீடு கிட்ட வர வர மனம் சூன்யமானது. எதிரில் வருபவர்கூட யாரென்று தெரியவில்லை.
“மீனா வரா” “மீனா வந்தாச்சு” குரல்களைக் கேட்டு நின்றாள்.
“மீனா…. உனக்கு message குடுக்கத்தான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டோம்மா…. கடேசில இன்னிக்குத்தான் உன்னோட
office ல பேச முடிஞ்சது… முந்தா நா குடுத்த தந்தி கிடச்சதா?” மாமா பேசப்பேச, மீனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. தாத்தாவின் உடல் எங்கே???
“முந்தா நா காலம்பற போயிட்டார்ம்மா… உன்னை
contact பண்ணிப் பாத்தோம்… அன்னிக்கு ராத்திரியே எல்லாம் ஆயிடுத்தும்மா…. அவரும் இந்த 96 வயசுல எல்லாம் பாத்தாச்சு”….
“மீனா…. தாத்தா ஊர்வலம் எப்டிப் போச்சு தெரியுமா? ஊர்க்காரால்லாம்
சாமி எங்களுக்கும் சொந்தம் – நீங்க தடை சொல்லக்கூடாதுன்னுட்டு, ஒரே அமக்களம் பண்ணிட்டா”
”கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஜனம் ஊர்வலத்துல வந்தா மீனா…… நம்ம பிணத்துக்கு மாலயல்லாம் போட்டு போட்டோ எடுக்க மாட்டோமா…. ஆனா school teachers, பஞ்சாயத்துக் காரால்லாம் வந்து மாலை, மலர் வளையம் வச்சு, போட்டோ எடுத்து, ஒரே கல்யாண அமர்க்களம் தான்”……..
“போ… போய் பாட்டியப் பாரு……. அவதான் மீனா எங்கன்னு கேட்டுண்டே இருக்கா”
பாட்டியிடம் மற்ற நான்கு குழந்தைகளும் உட்கார்ந்து கைநீட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மீனா போய் அவர்களுடன் உட்கார்ந்து தானும் கை நீட்டினாள் பாட்டியின் கை தயிர் சாதத்திற்காக…….
சச்சு சொன்னாள் “மீனா…… பாட்டிக்கு flash-back ஓடிண்டு இருக்கு…. தனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து சொல்லிண்டு இருக்கா….. பேசட்டும் பாவம்…… “
பத்மா மெதுவாகக் கேட்டாள் “என்னடி……. ரொம்ப அழுதியா…….. வரியா, நம்ம ரெண்டு பேரும் போய் தாத்தாவ கூட்டிண்டு வரலாம்……காஞ்சறங்கால் பக்கம் தான்”
பாட்டி மடிமேல் தலை வைத்து மீனா உறங்கிப் போனாள்…… பாட்டியின் கையுடன் இன்னும் நான்கு கைகள் அவளைத் தட்டிக் கொடுத்தன……