Monday, February 2, 2015

Introduction to Thirumurai - 90 minutes speech at Murugan Temple, Nerul, Navi Mumbai on 29th January 2015

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

சந்ததமும் பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடல்
பூதமுந்தீ நீரும் பொருபடையும் - தீது அகலா.
வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத்
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண்
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியம் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் - ஓசை
எழுத்துமுத லாம் ஐந்த இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள் முருகா1

தேனினும் இனிய சொல்லான், தீச்சுடர் மேனிகொண்டான்
ஊனுயிர்க்குயிரதான ஒன்றினைக் கலந்து நின்றான்
ஏனினிக்கவலை நெஞ்சே இன்றுனக்கருள் செய்தானிஞ்
ஞானவான் காமகோடி நாதனை நம்புவோமே!


ஒரு சிறிய பூனை பாற்கடலைக் குடிக்க முயற்சிப்பது போல் நான் ராமனின் கதை சொல்ல முயல்கிறேனே என்கிறார் கம்பர் கம்பராமாயணத்தின் தொடக்கத்தில். அதே போல் திருமுறை என்னும் கைலாய மலையின் முன் மிகச் சிறிய புழுவாகிய நான்  திருமுறை பற்றிப் பேசவும் துணிந்ததற்கு அந்தக் கைலாயபதியே துணை செய்ய வேண்டுமென வேண்டி என் சிற்றுரையைத் துவக்குகிறேன்.

பிலவ வருடம் தை மாதம் 21, 22, 23  – ஆங்கில வருடம் 1962 ஃபெப்ருவரி  - இந்த நாட்களில் ராகுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் மகர ராசியில் கூடின. இம்மாதிரியான கிரகங்களின் அமைப்பு உலகத்திற்குக் கேடு விளைவிக்குமென ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த நிலையில் மக்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த நாட்களை எதிர்நோக்கியிருந்தனர்.

ஞானஸம்பந்தமூர்த்தி தேவார கர்த்தாக்களில் ஒருவர். குமாரஸ்வாமி அம்சமாதலால் ஈச்வரனான ராஜாவுக்குப் பிள்ளையான யுவராஜா மாதிரி ஹோதா படைத்தவர். "ஆணை நமதே!" என்று தம்முடைய கோளறு பதிகத்தைப் பாராயணம் செய்கிறவர்களை நவக்ரஹங்கள் தொடமுடியாதென்று, தம் வாக்காலேயே கம்பீரமாக உத்தரவு போட்ட யுவராஜா! அதனால் தமிழ் தேசத்தில் அவர் வாக்குக்குச் சட்டம் மாதிரியான அதிகாரம் உண்டு. இதை மக்கள் உணர்ந்து அச்சமின்றி வாழ வேண்டுமென்று, மஹாபெரியவா காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஒரு திட்டம் செய்தார். கோவில் அதிகாரிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும், மற்றும் எல்லா பக்தர்களுக்கும் அதிருத்ரம், மஹாருத்ர ஜப ஹோமம், நவக்ரஹ ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், புருஷஸூக்த ஹோமம் செய்யுமாறு அறிவுறுத்தினார். இதைத் தவிர திரு ஞானஸம்பந்தமூர்த்தி அருளிய கோளறு பதிகப் பாடல்களை எல்லோருமாக எல்லா சிவாலயங்களிலும் ஒரு முறையாவது பாடவேண்டுமென்று சொன்னார். கோளறு பதிகத்தை ஆயிரக் கணக்கில் அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் எல்லோருக்கும் விநியோகிக்கச் செய்தார். ஸ்ரீமடம் தவிர, மற்ற கோவில்கள், சங்கீத சபாக்கள், தனியார் நிறுவனங்களும் கோளறு பதிகத்தை அச்சிட்டு எல்லோருக்கும் விநியோகித்தனர். மேலும், ஓதுவார் மூர்த்திகள் கோளறு பதிகத்தை பாடி, அந்த இசைத்தட்டுக்கள் எல்லாக் கோவில்களிலும் காலையும் மாலையும் முழங்கச் செய்தார்.
வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே."

பதிகத்தின் முடிவில் இந்த பதிகத்தைப் பாடுபவர்கள் அடியார்கள் வானில் அரசாள்வர் என்பதோடு விடாமல், ‘ஆணை நமதேஎன்று திடமாகச் சொல்கிறார்.

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே."

கோள் என்றால் கிரஹம்அறுத்தல் என்றால் நீக்குதல் கிரஹங்கள் மட்டுமில்லை எந்த விதத் தடங்கல்களும், இந்த பதிகத்தைப் பாராயணம் செய்வதால் நீங்குமென்பது ஞானசம்பந்தர் வரலாற்றிலிருந்தே தெரிகிறது. கோளறு பதிகம் எல்லோருக்கும் மனப்பாடமாகி விட்டது! சிவாலயங்கள் பலவற்றிலும் நவக்ரஹ சன்னிதியில் கோளறு பதிகம் எழுதப் பட்டிருப்பதை இன்றும் பார்க்கலாம்.

அந்த கிரஹசேர்க்கை நாட்டிற்குப் பெரிய ஹானி எதுவும் செய்யவில்லை என்பதைச் சொல்லவும் தேவையில்லை.

கோளறு பதிகத்தின் இந்தத் தன்மையை உணர்ந்து அதை நடைமுறையில் பயன்படுத்திய மஹாபெரியவரின் ஆழ்ந்த நுண்ணறிவும் திருமுறையின் மீது அவருக்கிருந்த பக்தியும் சைவ ஆதீன மடத்தைச் சேர்ந்தவர்களாலேயே மிகவும் போற்றப் பட்டது.

இந்தத் திருமுறை என்பது எது

விநாயகர் மேல் இந்த உரையின் ஆரம்பத்தில் சொன்ன ஐந்து கரத்தினைதிருமுறையின் ஒரு சிறு பாகமாகும். இந்த வெண்பா திருமந்திரத்தில் முதலில் வரும் விநாயகர் துதியாகும். திருமந்திரம் 10 ஆம் திருமுறையாகும்.

சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள் நூல்கள் பன்னிரண்டு. அவையே திருமுறை. சமயக்குரவர்கள் எனப்படும் அப்பர், சம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவரும் சேர்ந்து 276 சிவாலயங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் எனப்படும். தேவாரம் திருமுறையின் 1 முதல் 7 வரையிலான திருமுறையாகும். 8ஆம் திருமுறை திருவாசகம். ஒன்பது சிவனடியார்களின் திருப்பாக்கள் 9ஆம் திருமுறை. 10ஆம் திருமுறை திருமந்திரம். 11ஆம் திருமுறை பல அடியார்களின் பாடல் தொகுப்பாகும்.
பதினோரு திருமுறைகளைத் தொகுத்து வகுத்தவர் நம்பியாண்டார் நம்பி. பின்னர் அநபாய சோழன் என்ற மன்னன் சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை அரங்கேறச் செய்து அதைப் பன்னிரண்டாவது திருமுறை ஆக்கினான். இந்த திருமுறைகள் அனைத்தும் சிவபெருமானின் திருவாக்குகளே. அவரே அடியவர்களுக்கு உள்ளிருந்து உணர்த்தியும், முதலடி எடுத்துக் கொடுத்தும் வெளிப்படுத்திய அருள்வாக்குகள். அவை சிவபிரானின் அருளை அன்பர்களுக்கு அன்றும் தேடித்தந்தன; இன்றும் தரவல்லன. அதனாலேயே இவை அருட்பாக்கள் எனப்படும். இவற்றுள் சிவசக்தியாகிய உயிர் விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், என்றும் அழியாத அமரத்துவம் பொருந்தி நிற்கிறது. மிகப்பெரிய சிவாலயங்களில் நடராஜரின் சன்னதிக்கு அருகில் இந்த பன்னிரு திருமுறைகள் ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்து முக்கிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படும். பன்னிரு திருமுறைகளை படித்தாலோ, கேட்டாலோ முக்தி நிச்சயம்.

இதனால் தான் கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதியார்

அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும் அருணகிரிநாதரும்
பொருளுணர்ந்து உனையே எப்படிப் பாடினரோ
அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் சிவனே..

என்று பாடினார்.

சுத்தானந்தரின் வரிகளில் இவர்கள் எப்படிப் பாடினார்களென்றால்,

கருணைக் கடல் பெருகி காதலினால் உருகிக்
கனித் தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்.......

எப்படிப் பாடினரோ, அப்படிப் பாட வேண்டும் என்ற தாகத்தினால் பாரத சக்தி மஹா காவியம் என்ற மாபெரும் காவியத்தைப் படைத்தார்.

திருமுறையை நினைத்தால் கட்டாயம் நாம் நினைக்க வேண்டியவர்கள் யாரெனில், விநாயகப் பெருமான், சிவபெருமான், நம்பியாண்டார் நம்பி, ராஜ ராஜ சோழன், தேவாரம் பாடிய மூவர், மாணிக்கவாசகர், , திருமூலர் மற்றும் சேக்கிழார் மற்ற சிவனடியார்களும் திருமுறை தந்தவர்கள். 11ஆம் திருமுறையின் முதல் பகுதியைப் பாடியவர் திருஆலவாய் உரையும் கடவுளான சுந்தரேஸ்வரரே.

தேவாரப் பதிகங்கள் அத்தனையும் நமக்குக் கிடைக்கச் செய்தது – ராஜ ராஜ சோழனைக் கருவியாக வைத்து விநாயகர் தான்.

அபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும் ராஜராஜ சோழனுடைய காலத்தில் அங்கங்கே யாரோ சிலர்தான் ஒன்றிரண்டு தேவாரப் பதிகங்கள் தெரிந்து ஓதிக்கொண்டிருந்தார்கள். சிவ பக்தியில் ஊறி, சிவபாதசேகரன் என்றே பெயர் வைத்துக் கொண்டிருந்த ராஜராஜனுக்கு எப்படியாவது எல்லாத் தேவாரங்களையும் கண்டுபிடித்து ப்ரகாசப் படுத்த வேண்டுமென்று ஒரே துடிப்பாக இருந்தது.

அதே சமயத்தில், சிதம்பரத்துக்கு அருகில் திருநாரையூர் என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பி என்று ஒரு மஹான் இருந்தார். அவருக்குப் பிள்ளையார் ப்ரத்யக்ஷம். அவர் ஆதி சைவர். அதாவது குருக்கள் ஜாதி. அவருடைய பால்யத்தில் தகப்பனார் ஒருநாள் வெளியூர் போனபோது, தான் பூஜை பண்ணும் பிள்ளையாருக்கு இவரைப் பூஜை பண்ணச் சொன்னார். இவரும் அப்படியே பண்ணிப் பிள்ளையாருக்கும் நைவேத்யம் பண்ணினார். சிறு பிராயமானதால், பிள்ளையார் நிஜமாகவே நைவேத்யத்தைச் சாப்பிடுவார் என்று நினைத்தார். அவர் அப்படிப் பண்ணாததால் ஒரே அழுகையாய் அழுது கல்லிலே தலையை மோதிக் கொண்டு ப்ராணனை விட்டுவிடப் பார்த்தார். உடனே பிள்ளையார் ப்ரஸன்னமாகி அவர் ஆசைப்பட்டாற்போலேவே அத்தனை நைவேத்யத்தையும் சாப்பிட்டார்.

இதற்குள் பள்ளிக்கூட வேளை தப்பி விட்டதாக நம்பி மறுபடி அழ ஆரம்பித்தார். உடனே பிள்ளையாரே அவருக்கு வித்யாப்யாஸம் பண்ணி ஆத்ம வித்யை உள்பட எல்லாக் கல்வியிலும் தேர்ச்சி பெறச் செய்து விட்டார். அவர் பிள்ளையாரோடு ஸஹஜமாகப் பேசுபவர்.
தேவாரப் பதிகங்கள் அனைத்தையும் தொகுக்க ராஜராஜ சோழன் விநாயகருக்காக நைவேத்யங்களுடன் சென்று நம்பியிடம் வேண்டிக்கொண்டார்.

ராஜராஜசோழன் ஸமர்ப்பித்த நைவேத்யங்களை நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாருக்குப் படைத்தார். பிள்ளையார் வாஸ்தவமாகவே தும்பிக்கையை நீட்டி அதெல்லாவற்றையும் போஜனம் பண்ணினார் ராஜாவுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. நம்பியாண்டார் நம்பியிடம், "உங்களுடைய இந்த ப்ரத்ட்யச தெய்வத்தைக் கேட்டு மூவர் தேவாரங்கள் முழுக்கவும் எங்கே கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு சொல்லவேணும் இன்னொரு ஆசை, இப்ப கிடைத்துள்ள தேவாரத்தில் 'திருத்தொண்டத் தொகை' என்று 63 நாயன்மார் பேர்களைத் தெரிவிப்பதாக ஸுந்தரர் பாடல் இருக்கிறது. அந்த நாயன்மார்களின் திவ்ய சரித்ரங்களையும் பிள்ளையார் வெளியிட்டாரானால் லோக மங்களமாக எல்லாருக்கும் ப்ரசாரம் பண்ணலாம். அநுக்ரஹிக்கணும்' என்று ப்ரார்த்தித்துக் கொண்டான்.

இவன் சொன்னதை அவர் பிள்ளையாரிடம் சொல்லி, "அநுக்ரஹிக்கணும்" என்று வேண்டிக் கொண்டார்.

இந்தத் தமிழ்த் தேசத்துக்கு, பக்த லோகத்துக்கே, பரமோபகாரராகப் பிள்ளையாரும் அந்த இரண்டு விஷயங்களையும் தெரிவித்தார். "சிதம்பரத்திலே நடராஜா ஸந்நிதானமான கனக ஸபைக்கு மேலண்டையிலே ஒரு அறை இருக்கிறது. அதிலேதான் மூவரும் தங்களுடைய தேவாரச் சுவடிகள் வைத்திருக்கிறார்கள். கதவில் அவர்களே இலச்சினை வைத்திருக்கிறார்கள். அங்கே போய்க் கதவைத் திறந்து சுவடிகளை எடுத்துக்கோ" என்றார்

அறுபத்து மூவர் சரித்ரங்களையும் சொன்னார். 'நம்பிக்கு தும்பி சொன்னார்' என்பார்கள். தும்பி என்றால் யானை. அதன் கைதான் தும்பிக்கை. கணபதியே சரித்ரம் சொன்ன பெரிய பெருமை நம்முடைய நாயன்மார்களுக்கு இருக்கிறது! அவர் சொன்னதை நம்பி பிற்பாடு 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலாகப் பாடினார். திருத்தொண்டத் தொகையும், இந்தத் திருவந்தாதியுந்தான் பின்னாளிலே சேக்கிழார் விஸ்தாரமாகச் செய்த 'பெரிய புராண'த்துக்கு ஆதார நூல்கள்..

நம்பி சொன்னபடியே ராஜராஜ சோழன் சிதம்பரத்துக்கு ஆசை ஆசையாக ஓடினான்.

ஆனால் அங்கேயுள்ள நிர்வாஹஸ்தர்களான தீக்ஷிதர்களோ, மூவர் கதவை மூடி ஸீல் வைத்தார்களே தவிர அதை எப்போது திறக்கணும் என்று ஏதொன்றும் சொன்னதாகத் தெரியாததாலே, இப்போது தாங்கள் எப்படி அதைத் திறக்கப் பெர்மிஷன் தருவது என்று கேட்டார்கள். "அந்த மூவரே திரும்பி வந்தாலொழிய நாங்களாக அப்படிச் செய்ய 'அதாரிடி' இல்லையே!" என்று கை விரித்து விட்டார்கள்!

ராஜ ராஜன் திடுக்கிட்டான். ஆனால் ஒரு நிமிஷந்தான்! சட்டென்று அவனுக்கு ஒரு யுக்தி தோன்றிற்று. அவன் மஹாவீரனும், பக்திமானும் மட்டுமில்லை;புத்திமானும்.

ஆலய விக்ரஹங்கள் என்கிறவை வெறும் பொம்மை இல்லை, சின்னமோ, ஸிம்பலோகூட இல்லை, அவை ப்ராண பிரதிஷ்டை ஆனவையாதலால் ப்ராணனுள்ள, உயிருள்ள மூர்த்திகளே என்பதுதான் ஆஸ்திகக் கொள்கை. மநுஷ ரூபத்தில் தெய்வம் வந்தால் அவதாரம் என்கிறாற்போல விக்ரஹங்களையும் 'அர்ச்சாவதாரம்' என்றே சொல்வது வழக்கு.

இதை வைத்தே ராஜராஜ சோழன் யுக்தி பண்ணினான்.

மூவர் விக்ரஹங்களுக்கு விமிரிசையாகப் புறப்பாடு செய்வித்து அந்தக் கனகஸபா மேலண்டை அறை வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். தீக்ஷிதர்களிடம், "முத்ரை வைத்தவர்களே வந்துவிட்டார்கள். கதவைத் திறக்கணும்" என்று கேட்டுக்கொண்டான்.

எந்த மனஸையும் தொட்டுவிடும்படி இருந்தது, அவனுடைய பக்தியும், தேவார ஸொத்தை இந்தத் தமிழ் தேசத்துக்கு மீட்டுத் தருகிறதிலிருந்த ஆர்வமும் தீக்ஷிதர்கள் மனஸ் உருகிக் கதவைத் திறந்தார்கள்.

உள்ளே போய்ப் பார்த்தால்!' ஐயோ, இத்தனை ப்ரயாஸைப் பட்டும் கடைசியில் மலையைக் கெல்லி எலியைப் பிடித்தாற்போல, சுவடிகளையெல்லாம் ஒரேயடியாகச் செல்லு மூடிப் போயிருக்கிறதே' என்று எல்லாரும் வருத்தப்படும்படிச் சுவடிக் கட்டெல்லாம் செல்லரித்து மூடிக் கிடந்தது. மொத்தம் மூவர் பாடின லக்ஷத்து சொச்சம் பதிகங்களிலே மிகக் குறைச்சலானவை தான் அரிபடாமல் தப்பித்திருந்தன.

எல்லாரும் வருந்தியபோது, அசரீரி கேட்டது. "மலையைக் கெல்லி எலி இல்லை, இந்த எலியே வரப்போகிற காலங்களில் பிறக்கப் போகிறவர்களுக்கு யானைக்கு மேலே! அது பொதுவிலே அவஸர யுகமாயிருக்கும். அந்த அவஸரத்திலும் சினிமா, கிரிக்கெட் தண்டப்பேச்சு, பாலிடிக்ஸ், பத்திரிகை என்றால் மட்டும் மணிக் கணக்காக பொழுது இருக்குமே தவிர இதற்கெல்லாம் சேர்த்து வைத்து மற்ற விஷயங்களில் ஒரே பறப்பாக இருக்கும். அதிலேயும் ஆத்ம ஸம்பந்தமான விஷயமென்றால் கேட்கவே வேண்டாம்! லக்ஷம் பதிகம் என்றால் யாரும் கிட்டேயே போகமாட்டார்கள்! அதனால்தான் திவ்ய ஸங்கல்பத்தினால் இப்படி ஆனது. அது மாத்திரமில்லாமல் இந்தப் பதிகங்களே ஒரு ஜீவனைக் கடைத்தேற்றவும் போதும்" என்று அசரீரி சொல்லிற்று. தெய்வ ஸங்கல்பம் என்றவுடன் எல்லாரும் ஸந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள்.

வரப்போகிற காலத்தைப் பற்றி அசரீரி ஒரு மாதிரி 'ஹிண்ட்' பண்ணி விட்டதால், அதன் நல்லது இன்னுங்கூட அநுகூலமாக ஒரு ஏற்பாடு பண்ணினால் நன்றாயிருக்குமே என்று சோழ ராஜா நினைத்தான்.

எல்லாப் பதிகங்களையும் ஒருமொத்தமாகப் பார்த்தால் எதிர்கால ஜனங்கள் ஜாஸ்தி என்று தள்ளி விடுவார்களோ என்று ராஜா பயந்து, அதையும் பல பாகங்களாக க்ளாஸிஃபை பண்ணச் சொல்லி நம்பியாண்டார் நம்பியைக் கேட்டுக் கொண்டான்.

அவரும் அப்படியே தேவாரப் பதிகங்களையும், இன்னும் அப்போது தெரிந்திருந்த மற்ற சைவப் பெரியார்களுடைய பாடல்களையும் 'திருமுறைகள்' என்ற பேரில் பதினொன்றாகப் பகுத்துக் கொடுத்தார்.

12 திருமுறையில் முதல் மூன்றும் திருஞானசம்பந்த ஸ்வாமிகள் பாடிய தேவாரத் தொகுப்பு. இவர் மூன்று வயது பாலகனாய் இருந்த போது தந்தை சீர்காழி கோவில் குளத்தில் நீராடும்போது, பாலுக்கழுத பிள்ளைக்கு பார்வதியும் பரமேஸ்வரனுமே நேரில் வந்து பாலூட்டினர். இவர் குமாரஸ்வாமி, முருகப் பெருமானின் அவதாரமாகும். பால் வடியும் முகத்தினனான பாலகனைப் பார்த்த தந்தையார், யார் கொடுத்தார் பால் எனக் கேட்டதற்கு
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
என்று பதில் சொன்னார்.

திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் தேவாரம் அடுத்த மூன்று திருமுறை.

இவருக்கு பெற்றோர் அளித்த பெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியாரால் வளர்க்கப் பட்டவர். படிப்பிற்கு சென்ற இடத்தில் சமணராக மாறி தர்மசேனர் என்ற பெயருடன் பல்லவ ராஜ்ஜியத்தில் வாழ்ந்தார். சூலை நோயால் பாதிக்கப்பட்டபின் திலகவதியாரிடம் திரும்பி வந்து அவர் அறிவுருத்தலின் பேரில் சைவசமயத்திற்குத் திரும்பி
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.

என்ற தேவாரத்தைப் பாடி நலமடைந்ததும் ஊர் ஊராகச் சென்று சிவபெருமானை வழிபட்டு ‘திருநாவுக்கரசர்” என்று பெயர் பெற்றார். திருஞானசம்பந்த ஸ்வாமிகளால் ‘அப்பர்’ என அழைக்கப்பட்டார். சிவாலயங்கள் தோறும் சென்று உழவாரப்பணி செய்தார்.

ஏழாந் திருமுறை ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தேவாரமும் திடுத்தொண்டத் தொகையும். சுந்தரர் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, பல திருத்தலங்களுக்குச் சென்று பதிகங்களைப் பாடினார். இவருக்காக சிவபெருமான் திருவாரூர் வீதியில் பரவையார் வீடு வரை தூது சென்றார்; இவருக்காக பொன் பொதி தந்தும், ஆற்றிலிட்ட பொன் கட்டிகளை ஆரூர் குளத்திலிருந்து எடுத்துத் தந்தும், இவருக்காக நெல் குவியல் அருளியும், முதலை வாயில் போன பையனை உயிர்ப்பித்தும் பல லீலைகளைச் செய்தார். இவர் சிவனை பித்தாஎன்று முதலில் அழைத்ததினால் அந்த சொல் கொண்டே தன் முதல் தேவாரப் பதிகத்தைப் பாடுமாறு சிவபெருமானே சொல்ல.
பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா
எத்தான்மற வாதேநினைக்கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
என்று பாடினார்.

இவர்கள் மூவரும் தொழுது தொழுது பதிகங்கள் பாடினாரெனில், அடுத்தவர், மணிவாசகப் பெருமான், அழுது அழுது பதிகங்கள் பாடினார். மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாந் திருமுறையாகும். இவர் மதுரைப் பாண்டிய மன்னனின் முதல் மந்திரியாயிருந்து சிவபெருமானால் சிவதீட்க்ஷை சிவமந்திரம் தரப்பட்டு ஆட்கொள்ளப்பட்டு, மன்னன் தந்த பொன்னில் சிவாலயம் எழுப்பினார். மன்னனின் தண்டனையினின்று மணிவாசகரை விடுவிக்க நரியைப் பரியாகவும், பரியை நரியாகவும் செய்த திருவிளையாடலும், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலும்,ஆலவாயில் அரங்கேறியது.  திருவாசகத்திற்குருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பர்.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

என்று தொடங்கும் சிவபுராணமும், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி என்று தொடங்கும் திருவெம்பாவையும், போற்றி என் வாழ்முதலாகிய பொருளே என்று தொடங்கும் திருப்பள்ளியெழுச்சியும் திருவாசகப் பாடல்களே.

திருமாளிகைத்தேவர், சேந்தனார், கண்டராதித்தர் என்று ராஜ ராஜனுடைய மூதாதையாயிருந்து பக்திப் பாக்கள் பாடியவர், இன்னும் வேணாட்டடிகள், சேதிராயர் முதலான மொத்தம் ஒன்பது அடியார்களுடைய திருவிசைப்பாக்கள் என்கிற பாடல் வகைகள் ஒன்பதாம் திருமறையாகும். சேந்தனாரின் ப்ரஸித்தி பெற்ற 'திருப்பல்லாண்டு'ம் இந்தத் திருமுறையைச் சேர்ந்ததுதான்.

திருமூலர் 'திருமந்திரம்' பத்தாம் திருமுறை.

என்னை நன்றாக இறைவன் படைத்தான் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே’  என்று பிறந்தது இறைவனை தமிழால் பாடவே என்று வாழ்ந்தவர் திருமூலர்.

கடைசியாகப் பதினோராம் திருமுறையில்தான் நம்பியாண்டார் நம்பி தாமே பொல்லாப் பிள்ளையார் மேல் பாடியிருந்த 'இரட்டை மணிமாலை', கபில தேவர் பாடிய ‘மூத்த நாயனார் இரட்டை மணி மாலை', அதிராவடிகளுடைய 'மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை', ஆக, மொத்தம் மூன்று விநாயகத் துதிகளை ஒன்று சேர்த்தார். இரட்டை மணி, மும்மணி என்றெல்லாம் ஏன் பெயர் என்றால் அவற்றில் எல்லாப் பாடல்களும் ஒரே சந்தத்தில் இருக்காது. இரட்டை மணி மாலையில் இரண்டு விதமான சந்தங்களுள்ள பாக்கள் மாறி மாறி வரும். 'மும்மணி'யில் மூன்று விதமான சந்தங்களில் அமைந்த பாடல்கள் வரும்.

இது தவிர பதினோராம் திருமுறையில் நக்கீரருடைய 'திருமுருகாற்றுப்படை', அவருடைய இதர நூல்கள், சோழர்களில் கண்டராதித்தர் மாதிரிப் பல்லவர்களில் ஐயடிகள் காடவர்கோன் என்று ஒரு பெரிய சிவபக்தர், அறுபத்து மூவரிலேயே ஒருவர், அவர் பண்ணின 'திருவெண்பா', காரைக்காலம்மையார், சேர ராஜாவும் அறுபத்து மூவரில் ஒருத்தரும் ஸுந்தரர் ஸகாவுமான சேரமான் பெருமாள், எல்லோருக்கும் தெரிந்து பட்டினத்தார், கல்லாடனார் முதலான பன்னிரண்டு அடியார்களின் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

பன்னிரண்டு அடியார்களுடன் நம்பியாண்டார் நம்பி முடித்தாரென்றால், அவர் வகுத்த திருமுறைகளும் பிற்பாடு பதினொன்றோடு இன்னொன்று கூட்டிக் கொண்டு பன்னிரண்டாகப் பூர்த்தியாயிற்று. ராஜராஜசோழனுக்குப் பின்ஸந்ததியான அநபாய சோழனின் காலத்தில் அறுபத்து மூவர் சரித்திரத்தை, 'லோகத்திலேயே இதற்கு ஸமானமில்லை' என்று எல்லோரும் கொண்டாடும் படியாகத் 'திருத்தொண்டர் புராணம்' என்று சேக்கிழார் - அநபாய சோழ மஹாராஜாவின் பிரதம மந்திரியா யிருந்தவர் - பாடிக் கொடுத்தார். 'பெரிய புராணம்' என்று அதைத்தான் சொல்கிறோம். அதுவே பன்னிரண்டாம் திருமுறை.

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

சேக்கிழாரின் பெரிய புராணத்தின் வாழ்த்துப் பா இதுவாகும். இதில் 63 நாயன்மார்களின் வரலாறும் பாவடிவில் தொகுக்கப்பட்டுள்ளது. இதுவே இன்றும் நமக்கு நாயன்மார் வரலாறு தெரிந்து கொள்ள உதவுகிறது.

ஒரு பொருத்தம் என்னவென்றால் பதினோரு திருமுறைகளை வகுக்கச் செய்த ராஜராஜ சோழனுக்கு அப்பா அம்மா வைத்த பேர் - இயற்பெயர் - அருண்மொழி என்பது, பன்னிரண்டாம் திருமுறை பாடின சேக்கிழாரின் இயற்பெயரும் அருண்மொழிதான். தமிழ் மக்களை வாழ வைக்கும் அருள் மொழிகளையெல்லாம் ஒரு அருண்மொழி கண்டுபிடித்துக் கொடுத்தான். இன்னொரு அருண்மொழி அந்த அருள் மொழி அருளியவர்களின் சரித்ரங்களைப் படைத்துக் கொடுத்திருக்கிறார்.

இதற்கெல்லாம் அருளியவர் விக்நேச்வரர். தமிழ் மக்களுக்கு இஹம் - பரம் இரண்டும் கிடைப்பதற்கு அவர் செய்திருக்கிற உபகாரம் வேறு யாரும் செய்யவில்லை.

திருமுறை நம் தலைமுறை வரை வந்த கதையைப் பார்த்தோம்.

இதுவரை சொன்ன கதைகளைச் சொன்னவர் மஹாபெரியவா... காபிரைட், இண்டெலெக்சுவல் ப்ராபெர்டி என்று பார்த்தால், மேலே சொன்ன அத்தனையும்  தெய்வத்தின் குரலில் படித்தவையே. மஹாபெரியவர் தேவாரப் பதிகங்களையோ திருவாசகத்தையோ ஓதுவார்கள் ஓதினால் மனமுருகி ஊனுருகி உயிருருகி நின்று கேட்பார் என சொல்லக் கேட்டிருக்கிறேன். ஸ்ரீமடத்தில் ஓதுவார் மூர்த்திகளுக்கு எப்போதும் ஒரு சிறந்த வரவேற்பு இப்போதும் கிடைப்பது திருமுறையின் மீது மஹாபெரியவருக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது. எத்தனையோ தேவார பதிகங்களை புத்தகத் துணையின்றி மனப்பாடமாகச் சொல்வாராம் மஹாபெரியவர்.

தேவாரகர்த்தாக்களான அப்பர், ஸுந்தரர், ஸம்பந்தர் முதலானவர்களே அவற்றை பண் என்கிற ராகங்களில் அமைத்து ஈஸ்வரார்ப்பணம் செய்திருக்கிறார்கள். இசையே வடிவானவன் என்று ஈஸ்வரனையே பல விதத்தில் ஸங்கீதத்தில் ஈடுபட்டவனாக வர்ணித்துமிருக்கிறார்கள். ஒரு பெரிய ட்ரெடிஷன் வேதங்களை ஸ்வரம் மாறாமல் எத்தனையோ யுகங்களாகக் காத்துக்கொடுத்து வந்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டுக்கு ஒரு பெருமையாக இன்னொரு ட்ரெடிஷனில் ஓதுவாமூர்த்திகள் சுமார் 1,400 வருஷங்களாகத் தேவாரப் பண்களை மூல ரூபத்தில் காப்பாற்றிக் கொடுத்து வந்திருக்கிறார்கள். பூஜையிலேயே தீபாராதனைக்குப் பிறகு ஓர் அங்கமாகப் பிரதேச பாஷைப் பாட்டுக்கள் பாட வேண்டுமென்றிருக்கிறது. அதன்படிக் கோவில்கள் தோறும் தேவாரம் ஓதும்படியாக சோழ ராஜாக்கள் மான்யம் கொடுத்து இந்த இசை மரபை வளர்த்து விட்டிருக்கிறார்கள்.

தமிழ் கடவுள் முருகனின் அவதாரமல்லவா சம்பந்தர்.. முருகன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதால் சம்பந்தரின் தேவாரக் கதைகளைப் பார்ப்போம்.

மேலே சொன்ன கோளறு பதிகம் தோன்றிய கதையைப் பார்ப்போம்.

அந்தக் காலத்தில் ஜைனமதம், பௌத்த மதம் பாரத தேசத்தில் மிகவும் பரவி இருந்தன. ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்று விதியை மாற்ற இயலாதென நம்பியது ஜைன மதம். இந்த இரு மதங்களும் வேதம், யாகம், ஹோமம் இத்யாதிகளை எதிர்க்கத் தோன்றியவை.

வேதம் தப்பு; அதன்படி நடந்தால் பிரயோஜனமில்லை என்று அந்த மதஸ்தர்கள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இவர்களில் பாண்டிய தேசத்தில் ஜைனர்கள் அதிகாரம் உடையவர்களாகி, அரசனையும் தங்கள் மதத்திற்கு இழுத்துக் கொண்டார்கள். மதுரையிலிருந்த பாண்டியன் மாறவர்மன் சமணன் ஆனான். ஆனால், அவனுடைய பத்னியான மங்கையர்கரசியும், மந்திரி குலச்சிறையும் சிவபக்தி மிகுந்தவர்களாக இருந்தார்கள். ‘மங்கையர்க்கரசியார்’ என்று மரியாதை கொடுத்து அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக அவளைச் சொல்லியிருக்கிறது. காரணப் பெயராகவும் அதை நினைக்கும்படி நிஜமாகவே ஸ்திரீ குலத்துக்கு, மங்கையருக்கு, குண விசேஷத்தால் ராணியாக – அரசியாக – இருந்தவள் அவள். .

சோழ ராஜாவின் பெண்ணாகப் பிறந்தவள். அந்தக் காலத்தில் சோழர்கள் ஆதிக்கம் குன்றியிருந்தார்கள். வடக்கே பல்லவ மஹேந்திர வர்மாவும், தெற்கே பாண்டியன் நின்றசீர்நெடுமாறன் என்கிற மாறவர்மாவும் தலைதூக்கியிருந்தார்கள்.  இந்த இரண்டு ராஜாக்களுமே வைதிக மதத்தை விட்டு ஜைனத்துக்குப் போயிருந்தவர்கள்.  முதலில் அப்பர் ஸ்வாமிகளின் பிரபாவத்தினால் மகேந்திர வர்மா வைதிகத்துக்குத் திரும்பி வந்தான்.

அரசன் சமணனாய் விட்டதற்காக அவனுடைய பத்னியான மங்கையர்கரசியும், மந்திரி குலச்சிறையும் மிகவும் வருந்தினார்கள். பாண்டிய நாட்டில் அப்போது சமணர்களின் செல்வாக்கு அதிகம் இருந்தது. 

ஒருத்தரும் சிவாலயம் போகக் கூடாது; விபூதி இட்டுக் கொள்ளப்படாது” என்றெல்லாம் அவன் ஆக்ஞையிட்டான். “யதா ராஜா ததா ப்ரஜா” – “அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி” என்பதால் ஜனங்களும் அதற்கு அடங்கி நடக்க வேண்டியிருந்தது.

எல்லாரையும் விட ஒரு ராஜாவுக்குக் கட்டுப்பட்டு அவன் நினைக்கிற பிரகாரமே பண்ண வேண்டியவர் மந்திரிதான்; இதேபோல் ஒரு ஆண் பிள்ளைக்கு எல்லோரையும் விட அடங்கியிருக்க வேண்டியது அவனுடைய - பெண்டாட்டிதான். மதுரைப் பெண்டிர் இதற்கு விதிவிலக்கோ என்னவோ.... நானும் மதுரைப் பெண் தான்....பாண்டிய ராஜா விஷயத்திலோ, வெளிப்படக் காட்டிக் கொள்ளாவிட்டாலும்அவனுடைய மந்திரி குலச்சிறையாரும் பத்தினி மங்கையர்க்கரசியும் தான் உள்ளூர அவன் ஆக்ஞைக்குக் கட்டுப்படாமலிருந்தது.

அந்த இரண்டு பேரும் சிவபெருமானிடத்தில் பரம பக்தி கொண்டவர்கள். ராஜா ஆக்ஞையை, பதியின் உத்தரவைப் பகிரங்கமாக அவர்கள் ஆக்ஷேபிக்க முடியாவிட்டாலும், ரகசியமாக ஈச்வர ஆராதனையே பண்ணிக் கொண்டிருந்தார்கள். மங்கையர்க்கரசி புடவை ரவிக்கைக்குள் விபூதி ருத்ராக்ஷ தாரணம் பண்ணிக் கொள்வாளாம். பதி சொல்லை எதிர்த்துச் சண்டை போடாமல், அதற்காக சாச்வதமான ஸநாதன தர்மத்தையும் விட்டு விடாமல் இப்படி சாதுர்யமாக நடந்து பார்த்தாள். ஆனாலும் அவளுக்கு மனஸை உறுத்திக் கொண்டுதானிருந்தது. “மனஸ் ஸாக்ஷிப்படி புருஷனையும் அநுசரிக்க முடியவில்லை; தைரியமாக தர்மத்தையும் அநுஷ்டிக்க முடியவில்லையே” என்று வேதனை பட்டுக்கொண்டு, இதற்கு என்ன விமோசனம் என்று அவள் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தபோதுதான், அவளுடைய மனக் கவலைக்கு மருந்தாக ஒரு சமாசாரம் தெரிய வந்தது.

திருஞானஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் பட்டீச்சுரம் என்னும் ஸ்தலத்தில முத்துப் பல்லக்கு முதலியவைகளை ஈச்வரன் கொடுக்கப் பெற்றுக் கொண்டவர்.. முத்துப் பல்லக்கில் ஏறிக்கொண்டு ஸ்தல யாத்திரை செய்து கொண்டு வந்தார். அவருடன் 5000 பேர் பஜனை செய்து கொண்டு போவார்கள். பரமேச்வர பக்தி பண்ணிக் கொண்டு, சிவ க்ஷேத்திரங்களான ஊர்களுக்குப் போய்க் கொண்டிருந்தார்.

சம்பந்தரின் சிவபக்தியைக் கேள்விப்பட்ட மங்கையர்க்கரசி மந்திரியைக் கூப்பிட்டு ரஹஸ்யமாக ஆலோசனை பண்ணினாள். ஸம்பந்தரை எப்படியாவது மதுரைக்கு வர வைத்துவிட்டால் பாண்டியனையும் பிரஜைகளையும் மறுபடி தன் மதத்துக்குத் திருப்பி விடலாம்; அதுதான் விமோசனத்துக்கு வழி என்று தோன்றுகிறது என்று குலச்சிறையாரிடம் சொன்னாள். அவரும் ஒப்புக் கொண்டார்.


இரண்டு பேரும் சேர்ந்து ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளுக்குத் தூது அனுப்பினார்கள்.

அப்பர் ஸ்வாமிகளும் திருஞானஸம்பந்தரும் வேதாரன்யத்தில் இருந்த போது, மதுரையிலிருந்து இந்த அழைப்பு வந்தது.

ஸம்பந்தருக்கு அப்பர் 'ஸீனியர் கான்டெம்பரரி'. இரண்டுபேருக்கும் பரஸ்பரம் அபார ப்ரியமும் மரியாதையும். சேர்ந்து சேர்ந்தே அநேக க்ஷேத்ரங்களுக்குப் போயிருக்கிறார்கள். அந்த ஊர்களில் இருந்த ஜனங்களுக்கு அப்படியொரு பெரிய பாக்யம், சிவ பக்தியிலேயே ஊறிப் பழுத்த பழம் அப்பர், பிஞ்சிலேயே பழுத்த ஸம்பந்தமூர்த்திகள் இரண்டு பேரையும் சேர்தது தர்சிக்கும்படியாக!

சமணனாயிருந்த பல்லவ ராஜா தன் மாதிரியே சமணராயிருந்து விட்டு அப்புறம் சைவராகி விட்ட அப்பர் ஸ்வாமிகளைப் பல விதத்தில் ஹிம்ஸைப்படுத்திக் காளவாயில் போட்டான், கல்லைக் கட்டி ஸமுத்ரத்திலே போட்டான்.  பாதிரிப்புலியூர் ஜைனர்கள் தங்களுடைய தர்மசேனர் ஈச்வராநுக்ரஹத்தால் சூலை தீர்ந்து, உடனே ஈச்வர பக்தியை எங்கேயும் பரப்பக்கூடிய தேவாரங்களைப் பாட ஆரம்பித்து விட்டார் என்று அறிந்ததும், தங்கள் மதத்துக்கு ஆபத்து வந்து விட்டது என்று பயந்து, மஹேந்திர வர்ம பல்லவனிடம் போய் ஏதோ இல்லாததும் பொல்லாததுமாகக் கோள் சொன்னார்கள்.  அதைக் கேட்டுக் கொண்டு அவனும் திருநாவுக்கரசு ஸ்வாமிகளைச் சுண்ணாம்புக் கால்வாய்க்குள் தள்ளினான். அங்கேயும் ஈச்வரனின் பாத கமலங்களை அவர் ஸ்மரித்துக் கொண்டிருக்கக் காள்வாயே ஏர்-கண்டிஷன் பண்ணின மாதிரி ஆகிவிட்டது.  ஸுஸ்வரமான வீணா கானத்தையும், ஸ்வச்சமாக வீசுகிற சந்திரிகையையும், மந்தமாருதத்தையும், வஸந்த காலத்தின் மாதுர்யத்தையும் வண்டுகள் ரீங்காரம் செய்கிற ஒரு குளிர்ந்த தடாகத்தின் இனிமையையும்  ஒன்றாகச் சேர்த்து அநுபவித்தால் எத்தனை இன்பமாயிருக்குமோ அப்படிப்பட்ட பரமேச்வர பாதாரவிந்த அநுபவத்தை அந்தக் கொதிக்கிற காளவாய்க்குள் தாம் அநுபவிப்பதாக அவர் ஆனந்தமாகப் பாடினார்.

மாசில் வீணையும் மாலை மதியமும் 
        
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 
          
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 
        
ஈசன் எந்தை இணையடி நீழலே

தன் தண்டனை அவரை ஒன்றும் பண்ணவில்லை என்றதும் ராஜாவுக்கு இன்னும் கோபம் வந்தது. அவருக்கு விஷம் கொடுக்கப் பண்ணினான். அப்புறம் யானையை விட்டு இடறப் பண்ணினான். எதனாலும் அவரைப் பாதிக்க முடியவில்லை.  அப்புறம் கல்லிலே அவரைக் கட்டி ஸமுத்திரத்திலே கொண்டு போய் போடப் பண்ணினான். சொற்றுணை வேதியன்என்று அப்போதுதான் அவர் தேவாரம் பாடினார்.

அவனுடைய அருள்துணை ஸமுத்திரத்தில் கல்லைக் கட்டி இறக்கின போதும் காப்பாற்றாமல் விடாது என்று கானம் செய்தார்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன் 
        
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைத்தொழக் 
        
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் 
        
நற்றுணை யாவது நமச் சிவாயவே.

இப்படிப் பஞ்சாக்ஷரத்தின் துணையை நம்பி இவர் ஜபித்துக் கொண்டிருக்க சிவபெருமான் அருளில் அந்தக் கல்  தூணே தெப்பமாக மிதந்து வந்து கரையிலே அவரை ஒதுக்கியது. இப்போதும் அந்த இடத்துக்குக் ‘கரையேற விட்ட குப்பம்’ என்று பெயர் இருக்கிறது. இதுவும் திருப்பாப்புலியூர் கிட்ட உள்ளதுதான்.

காளவாய்க்கும் கல்லைக் கட்டிப் போட்டதற்கும் நடுவில் விஷம் கொடுத்ததாகவும், அவர் மேலே மதயானையை ஏவி விட்டதாகவும் இருக்கிறது. அப்படி மதயானையை ஏவினபோது அவர் பாட்டுக்குக் கொஞ்சங்கூட பயப்படாமல், "அஞ்சுவது யாதென்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை" என்று பதிகம் பாடிக் கொண்டு தீரமாக நின்றார். மத்தகஜம் வேகமாக வருகிறபோது கஜஸம்ஹார மூர்த்தியான ஸ்வாமியை, 'வேழம் உரித்த நிலை' என்று ஸ்துதித்துக் கொண்டு நின்றார்.  கஜானனரைப் பற்றியும் அந்தப் பதிகத்தில்தான் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்!

"பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே
கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறு."

"அந்தக் களிறு எந்த ஈச்வரனின் பரிவாரத்தில் இருக்கிறதோ, அந்த ஈச்வரனின் "தமர் நாம்", அதாவது, "தம்மவர் நாம்", அதாவது ஈச்வரனே, "இவர்கள் என்னுடைய மநுஷர்கள்" என்று சொல்லிக் கொள்ளும் படியான அடியார் நாங்கள் ஆகவே நாங்கள் ராஜா ஏவி விட்டிருக்கிற இந்த மதத் களிறானாலும் ஸரி, வேறே என்ன உத்பாதமானாலும் ஸரி, அஞ்சுவது யாதொன்றுமில்லை!" என்று பாடினார்.

மதயானை அவரைப் பிரதக்ஷிண நமஸ்காரம் பண்ணிவிட்டு ஏவினவனையே தாக்குவதற்குப் பாய்ந்தது. அவன் ஓட்டம் பிடித்தான்.

இந்த அற்புதத்தைப் பார்த்ததும் மஹேந்திர வர்மாவுக்குக் கண் திறந்தது. அவனும் ஜைன மதத்தை விட்டு வைதிக மதத்திற்குத் திரும்பி விட்டான்.

ராஜா வைதிக ஸமயத்துக்கு வந்ததும் பல்லவ ராஜ்யம் முழுதும் வேதநெறி தழைத்தோங்க ஆரம்பித்துச் சமணம், பெளத்தம் முதலிய புற சமயங்கள் மங்க ஆரம்பித்தன.

திருஞானஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் மதுரை செல்லவிருப்பதை அறிந்த அப்பர் ஸ்வாமிகள் சிறுகுழந்தையான ஞானசம்பந்தர் சமணர்களால் என்ன கஷ்டம் அனுபவிப்பாரோ தாமே அவையெல்லாவற்றையும் அநுபவித்தவராயிற்றேஎன்று இப்போது நேரம் காலம் சரியில்லைசற்று பொறுத்துப் போ என்று சொன்னதற்கு மறுப்பாக, பதிலாக, கோளறு பதிகம் பாடினார். தம்மை காக்க சிவமந்திரத்தை நம்பியவர் வயதில் சிறிய சம்பந்தர் விஷயத்தில் அவருக்கு அப்பராக, தந்தையாகப் பாசம் கொண்டு, அவர் உயிருக்கு அஞ்சியே போக வேண்டாமென்றார்.

கோளறு பதிகம் பாடி அவரைத் தேற்றிய சம்பந்தர் ஆனைமலை வழியாக மதுரை வந்து சேர்ந்தார்.

அவர் மதுரைக்குப் போனவுடன் சமணர்கள் வாதத்துக்கு வந்தார்கள். அப்பொழுது அரசியும் மந்திரியும் இந்த சமணர்கள் இவரை என்ன செய்துவிடுவார்களோ என்று பயந்தார்கள்.

ஈச்வரனுடைய கிருபை இருந்தால், எந்த ராஜ்யம் எப்படிப் புரண்டாலும் பயம் இல்லாமல் இருக்கலாம். முடிவிலே அருள் வெல்லும். ஒருவனுக்குப் பரமாத்மாவின் பரிபூரண கடாக்ஷம் இருந்தால் எப்பொழுதும் ரக்ஷிக்கும். பக்தியும் பகவத் கடாக்ஷமும் குறையும்பொழுது, தேசத்துக்கும் மதத்துக்கும் குறைவு உண்டாகிறது. ஈச்வர கடாக்ஷத்தைப் பரிபூரணமாகப் பெற்றவன் ஒருவன் இருந்தாலும் போதும்; அவன் மூலமாகத் தேசம் க்ஷேமத்தை அடையும்..

ஆகவே, ஈச்வர கடாக்ஷத்தைப் பூர்ணமாகப் பெற்ற ஞானசம்பந்த மூர்த்தி கொஞ்சமும் பயமில்லை என்று வாதம் செய்யத் துணிந்தார். வாதம் செய்யப் போவதற்கு முன் ஸுந்தரேச்வர ஸ்வாமி ஸந்நிதானத்தை அடைந்து ஒரு பதிகத்தால் ஸ்தோத்திரம் பண்ணினார். அதில் 'ஜைனர்களை வாதத்தில் ஜெயித்து உன்னுடைய புகழை நிலை நிறுத்த வேண்டும்' என்று பிரார்த்தித்தார். ஒவ்வொரு பாட்டிலும் கடைசியில்,

"ஞால நின்புகழே மிக வேண்டும் தென்
ஆலாவாயி லுறையும் எம் ஆதியே"

என்று பாடினார். ஆலவாய் என்றால் மதுரை.

ஜைனர்களை ஏன் ஜயிக்க வேண்டும்? 'அவர்கள் சிவன் கோயிலுக்கு வருவதில்லை; திருநீறிடுவதில்லை; ருத்திராக்ஷம் அணிவதில்லை; சிவபக்தியைப் பழிக்கிறார்கள்' என்று சொல்லி, இதனாலா அவர்களை ஜயிக்க வேண்டும் என்று சம்பந்தர் சொன்னார்? ஞாலமெல்லாம் சிவன் புகழ் பரவ வேண்டுமென்று ஆசைப்பட்ட அவர், இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் இப்படிச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்?

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதமில்லி யமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டும்-தென்
ஆல வாயிலு ரையுமெம் மாதியே
என்று முதல் பாட்டிலேயே சொல்கிறார்.

சமணரும், தேரரும் வேத வேள்வியை, அதாவது வேதங்களையும் யக்ஞங்களையும் நிந்திக்கிறார்கள் என்பதாலேயே அவர்களை வாதம் பண்ணி ஜயிக்க வேண்டும் என்கிறார்.

தேரர் என்றால் தேராவாதிகள் எனப்படும் பௌத்தர்கள்.

அவர்கள் வேதத்தையும் யக்ஞத்தையும் நிந்திப்பவர்கள் என்று தோஷம் சொல்லுகிறார். அது பெரிய பாபம் என்கிறார்.

அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே – அவர் பதிகம் பாடவில்லை – வெறுமே அவருடைய தர்சன மாத்திரத்திலேயே மதுரை ஜனங்களுக்கு ஒரு பக்தி வந்து விட்டது.  நடுவில் மங்கிக் கிடந்த மீனாக்ஷி சுந்தரேச்வர ஆலயத்துக்கு அவர் போக, ஜனங்களும் ராஜ ஆக்ஞை பற்றி ஞாபகமே இல்லாமல் அவரோடு கூட்டமாகப் போனார்களாம்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு ஜைனர்கள் ராஜாவிடம் போய், வசியம் பண்ணுகிற துர்மாந்திரீக சக்தியோடு ஒரு சின்னப் பிள்ளை வந்திருப்பதாகவும், அது தங்களுக்குக் “கண்டுமுட்டு” என்றும் சொன்னார்களாம். இந்தத் தகவலைக் கேட்டது தனக்குக் “கேட்டுமுட்டு” என்று பாண்டியன் சொன்னானாம். ”கண்டுமுட்டு” என்றால் கண்ணால் பார்த்த்தாலேயே தீட்டு என்று அர்த்தம். “கேட்டுமுட்டு” என்பது காதால் கேட்கிறதாலேயே தீட்டு. அவர்கள் ஸம்பந்தரைக் கண்டதாகச் சொன்னதே தீட்டு என்று பாண்டிய ராஜா நினைத்திருக்கிறான்.

அந்த ஜைனர்கள் அன்றைக்கு ராத்திரி ஸம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்கு நெருப்பு வைத்து விட்டார்கள்! பரமேச்வர சித்தம் என்ன என்று அப்போது ஸம்பந்தருக்குப் புரிந்தது. “மதுரையில் மறுபடியும் விபூதி, ருத்ராக்ஷம் பரவ வேண்டும். ப்ரஜைகள் சிவபக்தி செய்தால் அதற்காகத் தண்டிக்கிற ராஜாவுக்கே தண்டனை கொடுத்துத் திருத்த வேண்டும்” என்பதுதான் ஈச்வர சங்கல்பம் என்று தெரிந்து கொண்டார். அதனால் ஜைனர்கள் வைத்த நெருப்பு ராஜாவையே தாக்கித் தண்டிக்கட்டும் என்று நினைத்தார். “அமணர் கொளுவுஞ்சுடர் பையவே சென்று பாண்டியற்காகவேஎன்று பாடினார்.

அந்தத் தீ வேகமாய்ப் போய் ராஜாவைத் தஹித்துப் பொசுக்கிவிடாமல் நிதானமாகவே, உயிர் போகிற மாதிரி கொடுமை பண்ணாமலே, அவனை வருத்த வேண்டும் என்ற கருணையால்தான் “பையவே” என்று சொன்னார் என்பார்கள்.

நெருப்பு பாண்டியன் வயிற்றிலே புகுந்து எரிச்சல் வலியாக வாட்டி தேஹம் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. ’வெப்பு நோய்’ என்று அதைச் சொல்லியிருக்கிறது.

அப்பருக்கும் சூலைநோய் என்று வயிற்றில் உபாதை கொடுத்தே ஈச்வரன் ஆட்கொண்டான். அவர் அப்போது தாமே போய்த் தன் தமக்கையான திலகவதியாரின் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொண்டார்.
இப்போது பாண்டியனுக்காக மங்கையர்க்கரசி குலச்சிறையாரையும் அழைத்துக்கொண்டு ஸம்பந்தரிடம் போய், அவர் காலில் விழுந்தாள். முதலில் தன் பதியுடைய மதி திருந்த வேண்டுமென்பதற்காகச் சம்பந்தரை வரவழைத்தவள், இப்போது அவரிடம் பதி உயிர் பிழைக்க வேண்டும் என்று மாங்கல்ய பிக்ஷை வேண்டினாள். அவர் ஈச்வர ஸங்கல்பம் எப்படி இருக்கிறதென்று பிரார்த்தனை சக்தியினால் தெரிந்து கொண்டார். தாம் ராஜாவை சொஸ்தப்படுத்தி, அதன் மூலம் ”வேத வேள்வியை நிந்தனை செய்துழல்..அமணரை வாதில் வென்றழிக்கத் திருவுளமே” ஈச்வரன் கொண்டிருப்பதாக ஸுந்தரேச்வர ஸந்நிதானத்தில் உத்தரவு பெற்று நேரே அரண்மனைக்கே வந்து விட்டார்.

ராஜாவைக் குணப்படுத்துவதற்காக ஏகப்பட்ட ஜைனர்கள் தங்களுடைய மந்திரங்களை ஜபித்துக்கொண்டு மயில் பீலியும் கையுமாகக் கூடியிருந்த மண்டபத்தில் – அவர்கள் எதுவும் செய்யத் துணிந்தவர்கள் – இப்படி இந்தச் சின்னக் குழந்தை தன்னந்தனியாக வருகிறதே என்று அப்போது மங்கையர்க்கரசி பதறிவிட்டாள். அவரைப் பற்றி அவள் கேட்டிருந்த அற்புத சக்தியெல்லாம் அந்த சமயத்தில் அவளுக்கு மறந்து போய், ஒரு தாயாரின் ஹ்ருதயமே அவளிடம் பேசிற்று. “மஹா பெரிய மந்திரவாதிகள் இருக்கிற இடத்தில் இந்தக் குழந்தைப் பிள்ளை வருகிறதே! அதுவாகவேயா வருகிறது? நாமல்லவா வலிந்து ஆளனுப்பிக் கொலைக் களத்துக்கு வரவழைத்து விட்டோம்?” என்று ரொம்ப ‘கில்டி’யாக நினைத்துக் கொண்டாள். அப்போது அவள் கவலையெல்லாம் “சைவமே போய் விட்டுப் போகட்டும்; ஜைனந்தான் இருந்து விட்டுப் போகட்டும்; பதியின் தேஹ சிரமம்கூட எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; இந்தக் குழந்தைக்கு ஒரு கெடுதலும் வராமல் இருந்து விட்டால் அதுவே போதும்’ என்பதாகத்தான் இருந்தது!

அவள் மனஸில் படுகிற வேதனை ஸம்பந்தருக்குத் தெரிந்தது. உடனே அவளைக் கூப்பிட்டு ஒரு பதிகம் ஆறுதலாகப் பாடினார்.

மானின்நேர்விழி மாதராய்வழு 
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன் 
என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய 
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே.

ஆழ்வார், நாயன்மார்களைப் பற்றிய கதைகளில் உள்ள அநேக நிகழ்ச்சிகளுக்கு அவர்களுடைய பாட்டுக்களிலேயே direct reference இருக்கிறது என்று சொல்ல முடியாது.  மங்கையர்க்கரசியும், குலச்சிறையாரும் ஸம்பந்தரை வரவழைத்ததை ஏற்றுக் கொண்டு அவர் மதுரைக்கு வந்ததற்கும், அப்புறம் அவள் பயப்பட்டபோது அவளுக்குத் தைரியம் கொடுத்ததற்கும் வெளிப்படையாகவே ஸம்பந்தரின் தேவாரத்தில் ‘எவிடென்ஸ்’ இருக்கிறது.

பன்னலம் புணரும் பாண்டிமா தேவி குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன் திருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவர் இமையோர் ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.

மஹா பெரிய மந்திரவாதிகளாகத்தான் இருக்கட்டுமே! ஆனாலும் ஈச்வர ப்ரசாதம் இல்லாதவர்கள் எத்தனை பலிஷ்டரானாலும் அவனை நம்பியவருக்கெதிரில் துரும்பு மாதிரிதான். நான் வருகிற வழியில் ஆனைமலை முதலான இடங்களில் சமணர்கள் எனக்குப் பண்ணின தீங்கெல்லாம் என்ன ஆச்சு? இந்த ஈனர்களுக்கு இளைத்த எளியவனாக நான் ஆகிவிடுவேனா? இப்படிச் சொல்வது அஹம்பாவத்தினாலா? இல்லை. அந்தப் பரமேச்வரன் என் பக்கத்திலேயே நிற்கிறானே, அந்தப் பக்க பலத்தினால்தான் சொல்கிறேன். என்னை இங்கே தூக்கிக் கொண்டு வந்தவன் அவந்தானே? அவன் என்னை விட்டு விடுவானா? அவன் எனக்குள்ளேயே புகுந்து கொண்டிருக்கிற போது, ‘நான்’ என்று அகம்பாவமாகச் சொல்லிக்கொண்டு செய்ய என்ன இருக்கிறது?“  என்று இந்த மாதிரி கருத்துக்களை வைத்து ஸம்பந்தர் பதிகம் பாடினார்:

மானினோர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள்!

மான் மாதிரிக் கண் படைத்த மாதரசியே! ‘வழுதி’ என்கிற பாண்டியனுக்கு மகா பெரிய தேவியாய் இருக்கப்பட்டவளே!” வழுதிக்கு மாபெருந் தேவிகேள்” என்கிறார். எதைக் கேட்டுக் கொள்ளச் சொல்கிறார்?
பானல்வாயொரு பாலனீங்கிவன் என்று நீபரி வெய்திடேல் 

பால் நல்வாய்” என்பது ஸந்தியில் ‘பானல்வாய்’ என்றாயிருக்கிறது. “பால் குடிக்கிற பாலனாக நான் இருக்கிறேனே, இந்த சூராதி சூரர்களுக்கு எப்படித் தப்பிப் பிழைக்கப் போகிறேன் என்று நீ பயப்படாதே, கவலைப்படாதே, பரிவு எய்திடேல்.”

ஏதோ ‘பெரிய புராணத்’திலேதான் கதையாக இட்டுக் கட்டிக் குழந்தைப் பிள்ளையாயிருந்தபோதே ஸம்பந்தர் மகத்தான காரியங்களைச் சாதித்தார் என்று எழுதினதாகத் தோன்றினால் அது தப்பு; அவர் வாயாலேயே அவர் தம்மைப் பால்வாய்ப் பிள்ளையாகச் சொல்லிக் கொள்வதால் உண்மை ஊர்ஜிதமாகிறது.

பால்வாய்என்று மட்டும் சொல்லாமல் தன் வாய்க்குத் தானே ‘நல்’ என்று பாராட்டி அடைமொழி ஏன் போட்டுக் கொண்டார்? அவரோ அஹம்பாவமே இல்லாதவர். ஏன் சொன்னாரென்றால் அந்தப் பால் ஸாக்ஷாத் தேவியுடையதாக இருந்த்தால்தான்! ஏதோ பசும்பாலாக இருந்திருந்தால் “நல்லவாய்” என்று சொல்லியிருக்க மாட்டார்.

ஆனைமலை முதலான இடங்களில் எத்தனையோ இன்னலைத் தந்த – நான் தங்கியிருந்த மடத்துக்கே நெருப்பு வைத்த – இந்த ஈனர்களால் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லையே:

ஆனைமாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர் 
ஈனர்கட்கெளி யேனலேன்திரு வாலவாயரன் நிற்கவே

என்னை இவர்களுக்கு எளிசு பண்ணிவிட மாட்டான் என் கூடவே நின்று கொண்டிருக்கிற ஆலவாய் அரன்.”

ஆலவாய் என்பது மதுரை. அரன் என்றால் ஹரன். சிவ நாமங்களுக்குள் ஸம்பந்தருக்கு ரொம்பவும் பிடித்த பெயர்.

இப்படியெல்லாம் அவர் மங்கையர்க்கரசியைத் தேற்றின பிறகு, ஜைனர்களுக்கும் ஸம்பந்தருக்கும் எந்த மதம் உசந்ததென்று ராஜாவின் உடம்பைக் குணப் படுத்துவதை வைத்தே பலப் பரீ‌க்ஷை நடந்தது. Trial of strength நடந்தது.

இதற்குக் காரணம் மங்கையர்க்கரசிதான். “சைவமும் ஜைனமும் பதியின் உடம்பும் எப்படி வேணுமானாலும் போகட்டும்; இந்தக் குழந்தை ஆபத்தில்லாமல் மீண்டால் போதும்” என்று சற்று முந்தி நினைத்தவளுக்கு இப்போது ஸம்பந்தரிடம் அபார நம்பிக்கை வந்து விட்டது. அதனால், இவராலே இப்போது சைவத்தையும் காப்பாற்றிவிட வேண்டும், பதியையும் காப்பாற்றிவிட வேண்டும். இரண்டையும் சேர்த்து ஒரே காரியத்தில் முடிக்கப்பண்ணி விட வேண்டும் என்று நினைத்தாள். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற மாதிரி.

ராஜாவுக்குச் சரீரம் முழுக்க வெப்பு நோய் பரவியிருந்ததல்லவா? இப்போது அதை ஜைனர்களும், ஸம்பந்தரும் அவரவருடைய மதத்தின் மந்திர சக்தியால் குணப்படுத்திப் பார்க்கட்டும்; யார் குணப்படுத்துகிறார்களோ அவருடைய மதமே ஜெயித்ததாக அர்த்தம் என்று மற்றவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றாள்.

அவஸ்தைப்பட்டவன் ராஜாதானே? அதனால் முன்னே ‘கேட்டுமுட்டு’ என்ற அவனே இப்போது சடக்கென்று ஒப்புக்கொண்டு விட்டான்.

அவனுடைய சரீரத்தை ஜைனர்களும் ஸம்பந்தரும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டு அந்தந்தப் பாதியைத் தங்கள் தங்கள் மந்திரத்தால் சொஸ்தப் படுத்துவது என்று ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
சமணர்கள் இடது பாதியை மந்திரம் சொல்லி மயில்பீலியால் தடவ ஆரம்பித்தார்கள். தடவத் தடவ அக்னியில் நெய்யை ஆஹூதி பண்ணுகிறது போல வெப்பு – உஷ்ணம் – மேலும் மேலும் ஜாஸ்தியாயிற்று. ராஜாவால் பொறுக்க முடியாமல் ஸம்பந்தரைப் பார்த்தான்.

அவர் “மந்திரமாவது நீறு” என்கிற பதிகத்தைப் பாடிக்கொண்டு ஸுந்தரேச்வர ஸ்வாமியின் விபூதிப் பிரஸாதமான “ஆலவாயரன் திருநீற்றை’ப் பாண்டியனுடைய வலது பாதி சரீரத்தில் இட்டார்; இட இட உஷ்ணம் அப்படியே அடங்கிக் குளிர்ச்சியாக ஆயிற்று. அப்புறம் அவன் வேண்டிக் கொண்ட்தன் பேரில் இடது பக்க வெப்பு நோயையும் அவரே தீர்த்தார்.

திருச்சிற்றம்பலம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு        
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு 
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு        
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.    
         
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு    
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு      
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு      
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.       
         
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு        
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு       
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு   
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.   
       
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு      
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு     
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு     
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.  
         
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு 
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்      
ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு         
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 
         
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு      
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு    
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு       
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.     
         
எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு 
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு         
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு       
அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே.        
         
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு   
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு         
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு        
அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே.        
         
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு   
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு     
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு     
ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே. 
 
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட      
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு       
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு 
அண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே.      
 
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்   
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் 
தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்  
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.      

திலகவதி தானே தம்பிக்கு விபூதி கொடுத்தாள்; மங்கையர்க்கரசி புருஷனுக்கு ஸம்பந்தரைக் கொண்டு விபூதி பூசுவித்தாள். இரண்டு இடத்திலும் விபூதியே வியாதி தீர்த்தது. வைதிகத்தைக் காத்தது!

இப்படி அனலாயிருந்த உடம்பை அவர் புனலாகப் பண்ணிய பிறகும் ஜைனர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அனல்வாத, புனல்வாதங்கள் நடத்தச் சொல்லி, அதிலும் தோற்றுப் போனார்கள். அவரவர்களுடைய ஸித்தாந்தத்தைச் சுவடியில் எழுதி அதை நெருப்பில் போட்டால் எந்தச் சுவடி எரியாமல் இருக்கிறதோ, அதுவே ஸத்தியமென்று வைத்துக் கொள்வது அனல்வாதம். இப்படியே தங்கள் தங்கள் தத்துவத்தை எழுதிய சுவடியை ஆற்றிலே போட்டு, எது ப்ரவாஹத்தை எதிர்த்துக்கொண்டு மறு திசையில் போகிறதோ அதுவே உண்மையானதென்று வைத்துக் கொள்வது புனல்வாதம். எல்லாவற்றிலும் ஸம்பந்தர்தான் ஜயித்தார்.


ஸம்பந்தர் ஜயித்தார் என்றால் என்ன அர்த்தம்? சைவம் ஜயித்தது என்று அர்த்தம். சைவம் ஜயித்தது  என்றால் வேத மதம் ஜயித்தது என்றே அர்த்தம். 


பாண்டியனும் பாண்டிய நன்னாடும் மறுபடி ஸநாதன தர்மத்துக்கே வந்து விட்டது.

இவ்வாறு அநேகம் பெண்களாலேயே நம் தேசம் அந்நிய மதங்களின் ஆதிக்கத்திலிருந்து அவ்வப்போது மீட்கப்பட்டு, ஸநாதன தர்மம் புத்துயிர் பெற்று வந்திருக்கிறது. எப்போதுமே புருஷர்களைவிட அவர்களுக்கு அதிக மதாபிமானம் இருந்திருக்கிறது. இவன் ஆஃபீஸ், ஷிஃப்ட், டூர் என்று போக ஆரம்பித்த பின் ஸ்திரீகள்தான் இவன் செய்ய வேண்டிய பூஜாதிகளைப் பண்ணிக்கொண்டு இந்த மட்டும் இங்கே மதாநுஷ்டானம் இருக்கச் செய்திருக்கிறார்கள்.

பூர்வகால ஸ்திரீகளைப் போல மதத்தை ரக்ஷித்துக் கொடுப்பதில் இக்காலப் பெண்களும் நன்றாக மனஸைச் செலுத்திவிட்டால் நாம் ‘கன்வெர்ஷ’னைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதேயில்லை. 

ஸம்ஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் ரொம்பவும் காவியச் சுவையுடன் வாழ்க்கைப் பயனையும் தருகிற நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. தமிழ் நாட்டில் பிறந்தவர்களுக்கு இது இரட்டை பாக்யம். இந்தியா பூராவுக்குமாக இருக்கிற ஸம்ஸ்கிருதத்தோடு மட்டுமில்லாமல், மற்ற எந்தப் பிரதேசத்து பாஷையையும் விட ஜாஸ்தியாக ரொம்பப் பழங்காலத்திலிருந்தே தமிழ் பாஷையில் தான் பக்தி நூல்களும் நீதி நூல்களும் ரொம்பவும் ரஸம் நிறைந்தனவாக வந்திருக்கின்றன. ஸம்ஸ்கிருதம், தமிழ் இரண்டும் கற்றுக் கொண்டு விட்டால் லோகத்தில் தெரியாததே இராது. ஆனாலும் இத்தனை இருந்தும் ‘செய்யுளாயிருக்கே’ என்று உடனேயே கீழே போட்டுவிடுவதாக இருக்கிறது.

இப்போதே ‘ஸௌந்தரிய லஹரி’, ’அபிராமி அந்தாதி’, திருப்புகழ் என்று எவ்வளவு ஆர்வத்தோடு கற்றுக் கொள்கிறார்கள்? மதத்தைப் பெண்களும், பெண்களை மதமும் பரஸ்பரம் ரக்ஷிக்கும்படியாகப் பண்ண அங்கங்கே இந்த மாதிரி நிறைய ஸத் ஸங்கங்கள் ஏற்பட வேண்டும். பெண்கள் தாங்களே கூடி, தங்களுக்குள்ளாகவே படித்துப் புரிந்து கொள்ளும்படியாக Self-instructor –தர்மப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இந்த மாதிரி ஏழெட்டுப் புஸ்தகம் ஸம்ஸ்கிருதத்திலும் பழந்தமிழிலும் பதவுரை படித்து அர்த்தம் பண்ணிக்கொண்டு விட்டால் அப்புறம் வித்வான்கள் எழுதுவதையும் சொல்வதையும் புரிந்து கொண்டுவிட முடியும். செய்யுள், கடினமான நடை என்ற பயமெல்லாம் போய் விடும். நூல்களின் ரஸம் தன்னால் மேலே மேலே தேடிப் பிடித்துப் படித்துக்கொண்டு போகிற அபிருசியை உண்டாக்கிவிடும்.

நாட்டின் மஹோன்னத நிலைக்கு அஸ்திவாரம், ஸைன்யத்தின் பலமோ, ஸயன்ஸின் அபிவிருத்தியோ, மந்திரிகளின் யுக்தியோ, பொருளாதார முன்னேற்றமோ இல்லை. பெண்கள் தர்மத்தை நடத்துவதால் பெறுகிற தெய்வத்தன்மையே தேசத்துக்கு அஸ்திவாரம், ஜீவரத்தம் எல்லாம். அவர்கள் அப்படி தர்மப்படி ஆகிவிட்டால் நம்முடைய வேத மதத்துக்கு ஒரு நாளும் ஒரு குறைவும் வராது. அம்பாள் ஸ்வரூபமாகவே அவர்களைச் சொல்லியிருக்கிறது. அம்பாள்தான் இப்படிப்பட்ட அநுக்ரஹத்தைச் செய்ய வேண்டும். 

தேவார மூவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரரில், முதல் இருவர் தேவாரங்களில் சில தோன்றிய கதைகளைப் பார்த்தோம். இப்போது சுந்தரர் தேவாரத்தில் ஒரு சுவாரசஸ்யமான நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

ஒரு ஸமயம் ஸுந்தரமூர்த்தி, சேரமான் பெருமாளுடைய ஊருக்குப் போய் அரண்மனையில் தங்கி விட்டுப் புறப்பட்டார். ராஜாவான சேரமான் அவருக்கு ராஜோபசாரம் பண்ணி வழியனுப்பும்போது மூட்டை மூட்டையாக - 'பொதி' என்று சொல்வது, அப்படி - நிறையப் பொதி பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார். ராஜஸேவகர்கள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வர, ஸுந்தரர் கொங்கு நாட்டு வழியாகத் திருவாரூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
திருப்பூருக்குக் கிட்டே திருமுருகன்பூண்டி என்ற க்ஷேத்ரம். அங்கே காட்டு வழியில் ஸுந்தரர் ஆள்களோடு போய்க் கொண்டிருந்தார். அந்த ஊர் ஸ்வாமி பார்த்தார். 'வழக்கமாக நம்மிடம் அதைத்தா தா, இதைத் தா என்று நச்சரித்தபோது ஒரு க்ஷேத்ரம் விடாமல் நம்மிடம் வந்து பாடியவன், இப்போது நம்மை லக்ஷ்யமே பண்ணாமல் அல்லவா பெரிய ராஜஸம்பாவனையுடன் போகிறான்? நாம் ஏதாவது கொடுத்தால், 'நீயே அதைத் திருவாருரில் சேரு' என்கிறவன், ராஜ ஸேவகர்கள்தான் நிஜமான துணை என்ற தைரியத்தில்தானே இப்போது காட்டிலே இத்தனை பொதியுடன் போகிறான்?' என்று நினைத்தார். கொஞ்சம் சோதனை லீலை செய்வதற்கு முடிவு பண்ணினார்.

பூதகணங்களை வேடர்களாக ஆக்கி ஸுந்தரர் கோஷ்டியை எதிர்த்து வழிப்பறி செய்ய வைத்தார். உயிரக்கு ஹானி செய்யாமல் அந்த கணங்கள் பொருளை மட்டும் பிடுங்கிக் கொண்டு ஸ்வாமியிடம் வந்து பொதியைக் கொடுத்துவிட்டன.

எல்லாம் பறி கொடுத்துவிட்டு ஸுந்தரர் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த ஊர்ப் பிள்ளையாருக்குத்தான் கருணை பெருகிற்று. ஊருக்குப் பேர் திருமுருகன்பூண்டி. அந்த முருகன் "வைதாரையும் வாழ வைப்பான்" என்கிறார்கள். ஆனால் அந்த ஊரிலோ அவனடைய அண்ணாக்காரர்தான் தன்னை 'வயிறுதாரி' என்று ஸுந்தரர் வைததையும் நினைக்காமல் அவரை வாழவைக்க நினைத்தார்! அதனால் கோவிலை விட்டே கொஞ்ச தூரம் ஓடி வந்தார். சற்று தூரத்தில் ஸுந்தரரைப் பார்த்தவுடனேயே ஒரே கூவலாகக் கூவி அவரைக் கூப்பிட்டார். "இங்கே கோவிலில் இருக்கிற என் அப்பாதான் கணங்களை அனுப்பி வழிப்பறி செய்தது. அதிலே கணபதியான எனக்குப் பங்கு இல்லை. கோவிலுக்கு வந்து அவரைப் பாடு. பாடிவிட்டால் அவர் மனஸு குளிர்ந்து, தான் பண்ணினதை அப்படியே மாற்றி விடுவார்" என்று தகவல் கொடுத்து உபாயமும் சொல்லிக் கொடுத்தார். ஸுந்தரமூர்த்தியைக் கூவிக் கூவிக் கூப்பிட்ட அந்தப் பிள்ளையார் 'கூப்பிடு பிள்ளையார்' என்று பெயரில் திருமுருகன்பூண்டியிலிருந்து அவிநாசிக்குப் போகிற வழியில் இருக்கிறார்.

அவருக்கு ரொம்பவும் நன்றி சொல்லி விட்டு, அவர் பரம கருணையோடு வழிகாட்ட ஸுந்தரர் கோவிலுக்குப் போனார். 'நிந்தாஸ்துதி பண்ணி இன்னும் கஷ்டம் ஏற்பட இடம் கொடுக்க வேண்டாம். ஸ்வாமியேதான் கொள்ளை நடத்தினது என்பதுகூட நமக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம். துஷ்ட வேடர்கள் நிறைந்த இந்த ஊரில் இருக்கலாமா என்று ஸ்வாமியிடம் அங்கலாய்த்துக் கொள்கிற ரீதியிலேயே பாடலாம்' என்று ஸுந்தரர் நினைத்தார். 'இங்கே ஏன் ஸவாமிவாஸம் பண்ணணும்,' என்று அர்த்தம் கொடுக்கும்படியாக ஒவ்வொரு பாடலும் "எத்துக்' (கு) இங் (கு) இருந்தீர், எம்பிரானே?" என்று முடித்துப் பதிகம் பாடினார்.

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்     
    விரவ லாமை சொல்லித்   
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் 
    டாற லைக்குமிடம்        
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்      
    பூண்டி மாநகர்வாய்        
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் 
எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே

ஸ்வாமியும் தாம்தான் அந்த வழிப்பறியை 'அரேஞ்ஜ்' பண்ணினது என்று காட்டிக் கொள்ளாமல், அந்த வேடர்களுக்கு மனஸ் மாறிவிட்ட மாதிரிக் காட்டி, கணங்களை மறுபடி வேடர்களாக்கி அவர்கள் பொதியை எல்லாம் ஸந்நிதியலேயே ஸுந்தரருக்கு முன்னாடி கொண்டு வந்து போட்டுவிடும்படிப் பண்ணினார்.
இந்தப் பதிகத்தைப் பாராயணம் செய்தால் இழந்த பொருட்களை திரும்பப் பெறலாம் என்பது ஐதிகம்.

இம்மைப் பயன் பெற – உதாரணமாக,  
  •  வாழ்நாள் முழுவதும் எந்தவிதக் குறையுமின்றி வாழ,
  •  வறுமை நீங்கி பொருளாதார நிலை மேம்பட,
  •  உணவும் உடையும் குறைவின்றி கிடைக்க,
  •  இடது கண் பழுது நீங்க,
  •  வலது கண் பழுது நீங்க,
  •  திக்குவாய் கோளாறு நீங்கவும் பேச்சுத்திறமை மேம்படவும்,
  •  குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து அனைவரும் மகிழ்வுடன் வாழ,
  •  கல்வியில் தலைசிறந்து விளங்க,
  •  விஷக்காய்ச்சல், விஷக்கடி, செய்வினை - பில்லி - சூனியம் கோளாறு நீங்கவும், குரல் வளம் பெறவும், இளைய சகோதரன் நலம் பெறவும், எந்தக் காரியத்திலும் வெற்றி பெற,
  •  விஷம் மற்றும் விஷக்கடி நீங்குவதற்கு,
  •  தாயாரின் உடல்நிலை குணமாகவும், சுகப்பிரசவம் அமைவதற்கும், உறவினர் - நண்பர்கள் நட்பு நன்கு அமையவும், மனை முதலியன திறம்படக் கட்டி முடிப்பதற்கும்,
  • மக்கட் செல்வம் வாய்க்க, பட்டிமன்றம் முதலியனவற்றில் வாதத் திறமை பெறவும், எழுத்தாற்றல், தத்துவஞான தெளிவுபெற,
  • வெப்பத்தினால் ஏற்படும் அனைத்து நோய்களும் நீங்க,
  • எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், சிறை வாசத்தைத் தவிர்க்கவும்,
  • கடன் தொல்லைகளிலிருந்து நீங்கி நிம்மதியாக வாழவும், பிறரிடத்து ஏதும் கடன் பெறாமலே வாழவும்,
  • இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூர்ச்சைநோய், போதைப்பொருள் அடிமை முதலிய கொடிய நோய்களிலிருந்து மீள,
  • தீராத வயிற்றுவலி, குடல் (வயிறு) சம்பந்தமான நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலை ஆகியன நீங்குவதற்கு,
  • பக்கவாதம், இளம்பிள்ளை வாதம் மற்றும் எழும்பு முறிவு ஆகியனவற்றிலிருந்து குணம்பெற,
  • சர்ப்ப தோஷத்தால் தடைபடும் திருமணம் விரைவில் நிறைவேற,
  • தாமதமாகும் திருமணம் விரைவில் கூடி வருவதற்கு,
  • தம்பதியர்கள் பிணக்குத் தீர்ந்து சிறப்பான தாம்பத்திய வாழ்க்கை வாழ்வதற்கு,
  • நவக்கிரகம் போன்ற கோள்களால் ஏற்படும் சகல கிரக பீடைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ
  • அவமானங்கள், வீண்பழி மற்றும் எந்தக் காரியத்திலும் ஒரு தடை ஆகியனவற்றைத் தடுப்பதற்கு
  • இழந்த பொருளை மீண்டும் பெற,
  • திருஞானசம்பந்தர் தேவாரம் முழுமையையும் பாராயணம் செய்த பலனைப் பெறவும், புண்ணியப் பயன்கள், மனநலம், தந்தையின் நலம் பெறவும், தனக்குக் கிடைக்கக் வேண்டிய வாய்ப்புகள் நழுவிவிடாமல் இருப்பதற்கும்,
  •  வேலை இல்லா பிரச்சினை நீங்கவும், பாராட்டுக்குரிய செயல்கள் செய்யவும், இறைவழிபாடு, புண்ணியக் காரியங்கள் முதலியவற்றில் நாட்டம் கூடுவதற்கும்,
  •  தொழில் நிரந்தரம் பெற,
  •  வழக்குகளில் வெல்லவும், சகோதர / சகோதரிகள் வளமுடன் வாழவும்,
  •  உடல் உறுப்புகள் அனைத்தும் நலம் பெற,
  •  நிம்மதியான உணவும் உறக்கமும் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவும், இறைவழிபாட்டில் விருப்பம் மேலோங்கவும் - தேவாரப் பதிகங்கள் உள்ளன.

நம் அனைவருக்கும், ஏன் இந்த முருகன் கோவிலுக்குமே வேண்டியிருப்பதான பொருட் செல்வத்தைத் தரும் ஒரு தேவாரப் பதிகத்தைச் சொல்லி என்னுரையை முடிவு செய்து கொள்கிறேன்.

இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல்     தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
 

வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.


நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.


தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.


கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.


வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.


வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.

.
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.


உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.


பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.


அலைபுனல் ஆவடு துறையமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்மிறையை
நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் னேறுவர் நிலமிசை லையிலரே.
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க
இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க
இன்பமே சூழ்க எல்லாரும் வாழ்க