Friday, March 13, 2015

கோபம்...........

அன்று காலை குளியல் அறையிலிருந்தே (அறை என்ன…  கிணற்றடி தான் பல அவதாரங்கள் எடுக்கும்; காலை வேளைகளில் அதைக் குளியல் அறை என்று சொல்வோம்) ஆரம்பித்தது.

மீனாவிற்கு எல்லோரையும் விட முதலில் பல் துலக்கி, முதலில் குளித்து, முதலில் தலை வாரி, முதலில் தயாராகாவிட்டால், என்னமோ ஏக்கம் வந்து அழுகை அழுகையாக வரும்.  சின்ன வயதிலேயே அம்மா அப்பாவுடனில்லாமல், பாட்டி தாத்தாவுடன் வளர்ந்ததில் இந்த மாதிரி சில வினோத பழக்கங்கள் வந்து விட்டன.

அன்று மீனாவுக்கு முன்னால் பத்மா குளித்துவிட்டு அதைப் பறைசாற்றுவது போல் சித்தியிடம் தலை பின்னிக் கொள்ளப் போனாள். மர்பி லா என்பார்களே… அது தான் அன்று நடந்தது… மற்ற நால்வரும் குளித்து முடித்தபின் தான் மீனாவுக்கு கிணற்றடி கிடைத்துக் குளிக்க முடிந்தது. இதற்குள் சச்சுவும், வித்யாவும் சித்தியிடம் தலைபின்னி முடித்திருந்தனர்.

தான் தான் எல்லோரை விடவும் கடைசி என்ற எண்ணமே மனத்திற்குள் குமைந்து குமைந்து பெரிய அழுகையாக வெடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது.

வழக்கம் போல் பாட்டி பெரிய கிண்ணத்தில் தயிர்சாதம் பிசைந்து ஐந்து குழந்தைகளுக்கும் கையில் போடத் தயாரானாள். நான்கு பெண் குழந்தைகளுக்கு நடுவில் ஒரே ஆண் குழந்தையான வெங்கட்டின் நிலை பல சமயங்களில் பரிதாபம் தான்… தனக்கு கவனம் வேண்டுமென்று காட்டவோ ஏதோ வெங்கட் சத்தமாக உறிஞ்சிச் சாப்பிடுவதும், சாதம் கீழே இறைப்பதும் உண்டு. இதனால் மீனா எப்போதும் வெங்கட்டைத் தவிர்த்து வேறு யார் கிட்டேயோ சாப்பிட உட்கார்வாள்… மறுபடியும் மர்பி லா…… இன்று வெங்கட்டுக்குப் பக்கத்தில் உட்கார வேண்டியதாயிற்று…

குழந்தை வெங்கட்டுக்கு ஏதோ சந்தோஷம் மீனாவை அழ வைப்பதில்… வேண்டுமென்றே கையில் விழுந்த கவளத்தை ஒரேயடியாக உறிஞ்சி, மிக சத்தமாகக் கடித்து மென்று சத்தத்துடன் விழுங்கி, அதற்குத் திலகம் இட்டது போல் மீனாவின் பக்கம் திரும்பி ஒரு வெற்றிப்பார்வை பார்த்தான்.

அவ்வளவு தான்… அணை உடைந்தது… மீனா போட்ட கூச்சலில் வாசல் திண்ணையில் இருந்த தாத்தா சமையலறைக்கு வந்து விட்டார்; சமையலில் மும்மரமாக இருந்த அத்தை, சாதம் போட்டுக்கொண்டிருந்த பாட்டி, சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தைகள், அலுவலகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த மாமாக்கள், சித்தி அத்தனை பேரும் அவரவர் இடத்தில் உறைந்து நின்றுவிட்டனர்.

தாத்தா வந்து விட்டதாலோ என்னவோ வேறு ஒருவரும் ஒன்றும் சொல்லாமல் காத்திருந்தனர்.
மீனாவுக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது… ஏதோ ஒரு பெரிய தண்டனை தனக்குக் கிடைக்கவிருப்பதை… அது அழுகையாக உருவெடுத்து கை கால்களை உதைத்துக் கொண்டு, எல்லோரையும் பழித்துக் கொண்டு, எப்படி மற்ற நான்கு குழந்தைகளும் முதலில் குளிக்க விடாமல் சதி செய்தனர் என்று சொல்லிச் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.

தாத்தா மீனாவிடம் வந்து பக்கத்தில் அமர்ந்து, ‘மீனா, நீ பத்மா, வித்யா, சச்சு, வெங்கட் பத்தி சொன்னதெல்லாம் சரிதான்…. ஆனா, அதையெல்லாம் இப்டி சத்தமாக் கத்தினா உனக்குதான் எனர்ஜி வேஸ்ட் ஆகும்… அதனால, நெக்ஸ்ட் டைம் அவங்க உன்னைப் படுத்தினா, அவங்க கிட்டப் போய் அவங்க காதுல மட்டும் கேக்கற மாதிரி, உன்னை எனக்குப் பிடிக்கவேயில்ல… நீ என்னைக் கஷ்டப்படுத்தற… உனக்கு நான் ஒண்ணும் ஹெல்ப் இந்த ஜன்மால பண்ண மாட்டேன்னு காதுல சொல்லு… அது தான் அவங்களுக்குப் புரியும்… நீ கத்திச் சொன்னா சத்தம் தான் அவங்களுக்குக் கேக்கும்… விஷயம் புரியாது’……சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஏனோ, கோபம் வந்தது தப்பென்று சொல்லவில்லை……..

கடந்த 44 வருடங்களில், கோபம் வந்த போதெல்லாம், கத்துவதைத் தவிர்க்க, 10 வயது மீனாவில் தாத்தா அன்று இட்ட வித்து, பல சமயங்களில் கை கொடுத்துள்ளது.

என்ன பெரும் தவம் நான் செய்தேன் அறியேனே..........