பாவ மன்னிப்பு
அவ்வா……. இந்த சொல்லை எங்கு கேட்டாலும் ஒரு பதட்டத்துடன் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. என்ன சொல்ல, எதை விட… அவளைப் பற்றி நினைக்காத நாள் நன்றியில்லா நாளன்றோ… ஆயினும், அவளுக்காக என்ன செய்தேன் அவள் உயிருடன் இந்த உலகில் இருக்கும் போது என்று நினைத்தாலோ முகத்தை எந்த மூலையில் கொண்டு வைப்பது என்று தெரியவில்லை….
ஒரு அன்புச் சொல் சொல்லியிருப்பேனா…. ஒரு புடவை வாங்கித் தந்தேனா… ஒரு முழம் பூ வாங்கிச் சென்றேனா…. ஒரு பழம், ஒரு சிறு பொருள்,,,,,ம்ஹூம்…. ஒன்றும் நினைவுக்கு வரவில்லை…. இதற்கு என்ன பெயர் சொல்வது? முட்டாள்தனம் - கையிலிருக்கும் நெல்லிக்கனி கண்ணில் தெரியாத்தனம்…. இப்படி எதையாவது சொன்னாலும் மனதுக்கு ஆறுதலில்லை….
1960 லிருந்து 1998 வரை அவள் எனக்காக எத்தனைப் பிரயத்தனம், எத்தனை உடல் முயற்சி, எத்தனை பிரார்த்தனை செய்தாளோ அறியேன்….. சில உறவுகள் அவ்வாறு இருப்பதிலேயோ ஒரு சுகமோ? நான் ஒரு பூவோ, பழமோ, புடவையோ வாங்கி வருவேனென்றா எனக்காகப் பாடு பட்டாள்?? உத்தமம், உத்தமம், உத்தமம்!
பிறருக்கென்றே உழைத்து உழைத்து ஓயாத மனமிருந்தாலும், உடல் தேய்ந்து, கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு மாமாவின் வீட்டு முன்னறையில், தன்னினைவற்று சுருண்டு படுத்திருந்த கோலத்தைக் காணச் சகிக்காமல் ஓடி வந்த கோழைத்தனத்தை எந்த தெய்வத்திடம் சொல்லி எந்த மன்னிப்பு எங்குபோய் எவ்வாறு கேட்பேன்? அவளின் முழுவில் ஒரு சிறு பங்கு என்னில் இருந்திருந்தால், அவளை அப்படியே தூக்கி மடியில் சாய்த்து, ஏதோ ஒரு அன்பு மொழியை, அவளுக்கு நினைவு இருக்கிறதா இல்லையா என்று நினையாமல், மனதோடு மனம் பேச அன்று ஏன் தோன்றவில்லை.. ஏன் தெரியவில்லை… இந்தத் தவற்றிற்கு இந்த ஜென்மம் முழுதும் மன அரிப்பு, மன அவஸ்தைப் பட வேண்டியதுதான். என்னை என்னாலேயே மன்னிக்க முடியாது………
அதற்கு தண்டனை தான் நான் அவளின் கடைசிப்பயணத்தின் போது கூட, ஏன், அந்த 13 நாட்களில் ஒரு நாள் கூட செல்லமுடியாமல் போனது? கர்ம வினை என்பது இது தானோ? என் சிறுமைக்குக் கடவுள் என் கன்னத்தில் அறைந்த அறை இப்பொழுதும் வலிக்கிறது….
அவ்வா…. நான் உன் நினைவில் இதை எழுதும் போது என் கண்ணில் நீர் வருவதை எங்கிருந்தாவது நீ பார்க்கிறாயா? இல்லை…. நீ ஏன் பார்ப்பாய்? நீ தான் கடவுளின் காலடியில் நிம்மதியாக, இந்த உலக வாழ்க்கையின் எல்லாக் கஷ்டங்களையும் தாங்கியதின் வடுகூட இல்லாமல், மகிழ்ச்சியுடன் பிறப்பிறப்பில்லாப் பேருலகில் இருக்கிறாயே….
சித்திக்குக் கல்யாணம் ஆகி கல்கத்தா சென்றபின் அநாதை போல் தலைவிரி கோலமுடன் நின்ற எனக்கு, தலை வாரி (ரெட்டைப் பின்னல் ஒற்றைப் பின்னலானது) பள்ளிக்கு அனுப்பினாய்… டீச்சர்கள், “மதுரம் ஊருக்குப் போயிருச்சு… இந்தப் பிள்ளையப் பாரு… என்னவோ தலயும் வேஷமுமா….” 11 வயதான எனக்கு, இந்த சொல், உன் மேல் ஒரு கோபத்தைத் தந்தது… நீதான் என் இந்த நிலைமைக்குக் காரணம் எனக் கோபம்… நீ தான் சித்தியை என்னிடமிருந்து பிரித்தாய் என்ற ஆத்திரம்…. எவ்வளவு முட்டாள் நான்…
பள்ளியிலிருந்து வந்ததும், அதுவரை எத்தனை நடை நடந்தாயோ குடிநீருக்குத் தெரியாது…. என்னுடன் இன்னுமொரு தடவை குடிநீரெடுக்க வருவாய். இடுப்பில் ஒன்று, கையில் ஒன்றாக நீ வர, நான் தொடர, உன்னை இந்த உழைப்பிற்குப் போற்றத் தெரியாமல் போனேன். எப்பொழுது என் தண்ணீர் வேலை முடியும் என்று தோன்றியதே தவிர, நீ எவ்வளவு நடந்தாய் என்று நினைக்கத் தெரியா சுயநலம்…. நினைத்தால் எனக்கு நானே அருவருப்பாகிறேன்..
பள்ளி செல்லும் முன் கையில் பிசைந்து போட்ட சாத உருண்டைகளுடன் உன் சுயநலமற்ற தொண்டு செய்யும் தன்மையையும் போட மறந்து போய்விட்டாயா? பின் ஏன், எந்த ஒரு சிறு செயல் செய்தாலும், “நான் செய்தேன்” என்ற அகம்பாவம் தோன்றுகிறது? நீ செய்யாத எதை நான் இன்று சாதித்து விட்டேன்?
இரண்டாம் தாரமாக பள்ளி வாத்தியாரை மணந்தும், ஒரு முறையேனும், தன் பிறந்தவீட்டாரை ஏன் இப்படிச் செய்தனர் என்று நீ புலம்பி நான் கேட்டதில்லையே…. உனக்குள் ஏதோ ஒரு நிறைவு எவ்வாறு வரவழைத்துக் கொண்டாய்?
கல்யாணம் ஆனதிலிருந்தே, தன் மூத்தாளை மதித்து, அவள் நினைவாக, ஒரு புதுப்புடவை கட்டாமல், அவள் நினைவிற்கு மரியாதை தந்தாயே…. எங்கு எவ்வாறு இதைக் கற்றாய்?
மூட்டை மூட்டையான தங்க நகைகளை, குடும்ப செலவிற்கு விற்கக் கொடுத்தாய் என்று கேள்விப்பட்டேன்…… ஒரு பெண்ணிற்கு, நகை, அதுவும், பிறந்த வீட்டிலிருந்து கொண்டுவந்த நகையின் மதிப்பு, தங்கத்தில் இல்லை, அதன் நினைவுகளில் என்று இன்று புரிகிறது….ஆனால், நீயோ கணவனுடன் குடும்ப வண்டியின் சகமாடாக உழைப்பதன்றி வேறு எந்த நினைவுமில்லாமல், எதையும் இழக்கிறோம் என்ற நினைவுமில்லாமல் வாரி வாரித் தர எந்தப் பள்ளியில் எந்த ஆசிரியரிடம் கற்றாய்?
பெண்ணிற்கு முழுமை தரும் தாய்மையின் முதல் சின்னம் தொட்டிலிலேயேத் தவறிப் போன பொழுது உன் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? அந்த நினைவுகள் உன் ராத்தூக்கத்தைக் கெடுத்ததோ…. அவ்வா… ஏன் எனக்கும் கொஞ்சம் இவையெல்லாம் புரியும் வரை இல்லாமல் போனாய்? அப்போதே தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் புரிதலைக் காட்டியிருப்பேனே…….
அதன்பின் கண்ணிற்குக் கண்ணாய், முத்துக்கு முத்தாய், அருமையாய் பெற்ற செல்வமகனை, ஊரெல்லாம் நிஜ இராமனோ எனப் பேசுமளவு, உருவத்திலும், பண்பிலும் “தலை’மகனான இரயில் மாமாவை வாரிக் கொடுத்து நீ பட்ட வேதனையைப் பார்த்திருக்கிறேன்…. ஆனால் அதன் ஆழம் அப்போது புரியவில்லை…. ஏன் நினைத்து நினைத்துக் கண்ணீர் வடிக்கிறாய் என்று மட்டும் தோன்றியதேயன்றி, அந்தக் கண்ணீர் ஊற்றின் ஆரம்பமும் முடிவும் புரியவில்லை….. அவ்வா…. இந்த சோகத்தைத் தாங்கி எவ்வாறு ஜீவித்தாய்? அல்லது நடைப்பிணமாகத் தான் நான் பார்த்தேனோ?
இரயில் மாமாவிற்குப் பின் பெற்ற குழந்தைகளில், ”தங்கியது சில” “தங்காமல் போன” குறைப் பிரசவங்கள் பல என உன் வாயாலேயே கேட்டிருக்கிறேன். உனக்குள் எவ்வளவு ஆழம்? எதையெல்லாம் தாங்கும் சக்தி உனக்குக் கடவுள் தந்தான்?
அதனால் தான், நாங்கள் செய்த சின்னச் சின்ன தொந்தரவுகளை, பெரிது படுத்தாமல் மகிழ்ந்தாய் போலும்…….
பேரக் குழந்தைகள் நாங்கள் ஐவரும் செய்த வம்புகள் ஏராளம்….
க்ருஷ்ண ஜெயந்திக்கு செய்த எல்லா பட்க்ஷணங்களையும் ஒரே நாளில் நாங்கள் ஐவரே காலி செய்து உன்னைக் கோபப்படுத்தினோம்….
கிணற்றில் தண்ணீர் வாரி வாரி இறைத்துக் காலி செய்து, உன்னை தண்ணீருக்காக நடையாய் நடக்க வைத்தோம்….
”பிள்ளைவயல் காளி தன் பரிவாரங்களை என் வீட்டிற்குக் குழந்தைகளாக அனுப்பி விட்டாள்” என்று நீ அலுக்கும் அளவிற்கு லூட்டி அடித்திருக்கிறோம்…..
”ஆனாலும், ரெங்கம் தான் உனக்குச் செல்லம்…. எங்களை அருகில் படுக்க விடமாட்டாய்” என்று சண்டை போட்டிருக்கிறோம்………
”காபி” என்று உன் வாயின் நாற்றத்திற்கு அருவருப்புப் பட்டிருக்கிறோம்……
”தலைவாரத் தெரியவில்லை” என்று பாதி பின்னும் போதே எழுந்து ஓடியிருக்கிறோம்…….
கையில் பிசைந்து போட்ட சாதத்தை முடியும் தருவாயில் மீதி வைத்து எழுந்து ஓடி, நீ கத்துவதைப் பார்த்து சிரித்திருக்கிறோம்……
மடித் தண்ணீர், குடி தண்ணீர் சேர்க்க நீ படும் பாடு புரியாமல், மடி தண்ணீரில் டம்ளரைப் போட்டு முகர்ந்து குடித்து, உன்னை அழ அழச் செய்திருக்கிறோம்……..
தாத்தாவை நீ திட்டும்போது, ஏதோ எனக்கு உன்னைவிட தாத்தா சொந்தம் போன்ற நினைப்பில் “ஏன் தாத்தாவை இவள் திட்டுகிறாள்” என்று வருத்தப்பட்டிருக்கிறேன்…. அவரை முழுவதும் அறிந்தது நீயே என்று தெரியாமல் போனது அப்போது………
மதிய வேளைகளில் நடையில் நீ படுத்துக்கொண்டு, ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் புத்தகங்களைப் படித்துக் காண்பிக்கச் சொல்வாய்…. தத்திக் குத்தி, தடவித் தடவி நான் படித்ததை நீ ரசித்திருக்கிறாய்….. உன் கண்ணிற்கு ஒளி போய் படிக்க இயலாததால், என் சிற்றறிவை நம்பி உன் சிறிய பொழுதுபோக்குகள்…. இதை அறியும் புத்தி அப்போதே இருந்திருந்தால், நாளெல்லாம் ராவெல்லாம் உனக்குப் படித்திருப்பேனே அவ்வா……
எல்லாருடைய துணிகளையும் துவைத்து, காயவைத்து, இஸ்திரி போட்டது போல் மடித்து வைத்து - உன்னால் தான் முடியும்……. துணிகள் மடிக்கப்படாமல் மூட்டையாகக் கிடக்கும்போது, உன்னை நினைத்துக் கொண்டு குற்ற உணர்வுடன் சரியாக மடிக்கிறேன் இப்போதும்…….
யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலோ, தீட்டு என்றாலோ, ராப்பகல் பாராமல் சேவை…. உன் உடம்பென்று ஒன்று இருப்பதை நீயும் மறந்தாய்…. நாங்களும் மறந்தோம்……
அம்மா அப்பாவுடன் திருநெல்வேலி சென்ற போது, விரைவில் நான் குழந்தைப் பருவத்திலிருந்து குமரியாவேன் என்று நீ சொன்னது புரியாததால் ஏன் இவள் ஏதோ சொல்கிறாள் என்று நினைத்து விடை பெற்றேன்…. உன் கூற்றே மூன்று மாதங்களில் நிஜமானது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்து, விடுமுறை நாட்களில் உடல் முழுதும் அம்மை வந்து, நிற்கவோ, உட்காரவோ முடியாமல், மேலில் துணி போட முடியாமல் தவித்த தருணங்களில், நீ தான் என்னுடன் 24 மணி நேரம் இருந்து வேப்பிலை தடவினாய்…. அப்போதும் என் வருத்தம் எனக்குத் தெரிந்ததே தவிர, உன் மெய் வருத்தம் தெரியாமல் போனதே….. இனி எப்போது எந்த ஜென்மத்தில் உனக்கு நான் என் கடன் தீர்ப்பேன்? என் கண்களில் இப்போது வடியும் இந்த நீர் அந்தக் கடனில் ஒரு சிறு பங்கையாவது தீர்க்குமோ?
கல்லூரி நாட்களில், படிப்பு, வீட்டு வேலை, மற்ற நினைவுகளில் உன்னையோ உன் நினைவுகளோ நிற்கவில்லை…. நீ எங்கள் வீட்டில் வருவதே குறைந்ததினாலோ…. நான் ஏன் வந்து உன்னைப் பார்க்கவில்லை…. அறியாமை, முட்டாள்தனம் என்பதொழிய வேறு விடையில்லை.
என் கல்யாணத்தின் போது உட்கார முடியாமல் உட்கார்ந்து, என்னை ஆசீர்வதித்தாய்…. அந்த ஆசிகளில் என் வண்டியும் ஓடுகிறது………கொஞ்சம் பொறுமை, புலனடக்கம் நீ எனக்குத் தந்த சீர் – கூட்டுக் குடும்பத்தில் இவ்வளவு வருடங்கள் பெரிய சண்டை சச்சரவு இல்லாமல் என்னை வாழ வைக்கிறது.
மகப் பேற்றிற்கு மதுரை வந்து, ஆஸ்பத்திரியில் சேர்ந்ததும், எல்லாவற்றிலும் மன உறுதியுள்ள என் அம்மா, நான் 20 மணி நேரத்திற்கு மேல் பிரசவ வலி படுவதைக் காணச் சகியாது, உன்னிடம் என் பொறுப்பைத் தந்து வீட்டிற்குச் சென்றாள்… உன் காலடி பட்டதும், என் குழந்தை வெளியே நல்லபடியாக வந்தாள்… குழந்தை பிறந்த முதல் இரண்டு நாட்கள், என்னுடன் ஆஸ்பத்திரி அறையில் கூட இருந்து என் வலிகளுக்கு விளக்கம் சொல்லி என்னை தைரியப்படுத்தியது இன்று வரை என் மகளுக்குக் காப்பாக இருக்கிறது அவ்வா…..அப்போது உனக்கே வயது எண்பதுக்கும் மேல்… அவள் வளர்ந்த பின் உன்னிடம் காட்டினேனோ தெரியவில்லை….. நான், என் வீடு, என் கணவர், என் குழந்தை, என் வேலை என்று இருந்த அந்த நாட்களில் உன் கண்ணிற்கு அவளை இன்னும் ஒரு முறை காட்டத் தோன்றவில்லை…..எவ்வளவோ தவறுகளில் இன்னும் ஒன்று….
அதன்பின் நினைவுகளில் நீ வர வரத்தான், என் வயதும் வாழ்க்கை அனுபவங்களும் சேரச் சேரத்தான் உன்னை என்னால் அறிய முடிகிறது… அதுவும், கொஞ்சமே…… என் அசட்டுத்தனத்தை, அறியாமையை மன்னிப்பாயா?
1 comment:
எனது அவ்வா கதையை நான் மனதில் புடம் போடும் வேளையில், இது எனக்கு மின்னஞ்சலில்! உமா அக்காவை மும்பை பிரயாணத்தில் பார்த்தபோது, அவ்வாவைப் பற்றி எழுதியுள்ளேன், படித்தாயா? என்றார்கள். அட, இருவர் மனதிலும் அவ்வா, அல்வாபோல் ஒட்டிக்கொண்டதை என்ன என்று சொல்வேன்.? அன்பு அவ்வாவுக்கு மானசீகமாக ஒரு உம்மா, உமாவுக்கும், அந்த கைகளுக்கு ஒரு உம்மா!
Post a Comment